வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று (மார்ச் 31) பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று (மார்ச் 31) பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, திமுக தலைமை அலுவலகம் திறப்பு தொடர்பாக அழைப்பு விடுத்தது மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நிர்மலா சீதாரமனிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
கோரிக்கை
இந்த சந்திப்பின் போது, நிர்மலா சீதாராமனிடம், தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை ரூ.13,504.74 கோடி உட்பட 20,8860.40 கோடி நிலுவையில் உள்ளது. மாநிலம் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ரூ.20,860.40 கோடியை விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு காலக்கெடுவை 2022ஜூன் மாதத்திற்கு பிறகும் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்.
14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைத்த அடிப்படை மானியம் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தை விடுவிக்க வேண்டும். அடிப்படை மானிய நிலுவை தொகை ரூ.548.76 கோடி. செயல்பாட்டு மானியம் ரூ.2029.22 கோடி விரைந்து விடுவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்