கோலார்:ஷிவாரபட்டணாவில், 35 ஆண்டுகளாக முஸ்லிம் சிற்பியொருவர், ஹிந்து கடவுள்களின் சிலைகளை செதுக்கி, மத ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
கோலார் மாலுார் ஷிவாரபட்டணா சிற்ப கலைக்கு பெயர் பெற்றவர். இங்குள்ள சிற்பிகள், நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக, கடவுள் சிலைகள், கொடிக்கம்பங்கள், பிரபலமான தலைவர்களின் உருவச்சிலைகள் உட்பட பல விதமான சிலைகளை செதுக்குகின்றனர். ஒரு கல்லை, தங்களின் கை வண்ணத்தால் அற்புதமான சிலைகளாக உருவாக்குகின்றனர்.
இக்கிராமத்தின் முஸ்லிம் சமுதாயத்தின் முனாவர், 50, என்ற சிற்பி, 35 ஆண்டுகளாக, இந்து கடவுள்களின் சிலைகளை செதுக்குகிறார். இவரது தந்தையும் கூட, இதே தொழில் செய்து வந்தார். அதை மகன் தொடர்ந்து, ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இதுகுறித்து முனாவர் கூறியதாவது:முதலில் என் தந்தை, கடவுள் சிலைகளை செதுக்கும் தொழில் செய்தார். நானும் இதே தொழிலில் இருக்கிறேன். சிவன், கிருஷ்ணர், நவக்கிரகம், நாகர் சிலைகள் உட்பட பல கடவுள்களின் சிலைகளை செதுக்கியுள்ளேன்.இந்த சிலைகளை செதுக்கும் போது, மேலும் இது போன்ற சிலைகளை செதுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது.சிற்பத்தொழில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
பெங்களூரு, தமிழகம், ஆந்திரா உட்பட, வெளி மாநிலங்கள், நாடுகளிலிருந்தும் இங்கு வந்து, சிற்பங்களை வாங்கி செல்கின்றனர்.எங்களுக்கு ஹிந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு கிடையாது. அனைத்து சமுதாயத்தினரும், ஒற்றுமையாக இருக்கிறோம்.ஹிந்துக்களின் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால், எங்களை அழைப்பர். எங்கள் வீடுகளில் நிகழ்ச்சி என்றால், அவர்களை அழைப்போம். அரசியல் உள் நோக்கத்தில், சிலர் ஹிந்து, முஸ்லிம் விவாதங்களை உருவாக்குகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.