திருப்பூர்: அபரிமிதமான ஒசைரி நுால் விலையால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பரிதவிக்கின்றன; குறு, சிறு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, நுால், எட்டாக்கனியாகி வருகிறது.
![]()
|
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறைக்கு, ஒசைரி நுால் பிரதான மூலப்பொருளாக உள்ளது. நடப்பு சீசன் துவக்கம் முதலே, பஞ்சு விலை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில், கேண்டி (356 கிலோ) 78 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை, அதிவேகமாக உயர்ந்து, தற்போது, 93,500 ரூபாயை எட்டிப்பிடித்துள்ளது.
பஞ்சு விலைக்கு ஏற்ப, தமிழக நுாற்பாலைகள் ஒசைரி நுால் விலையையும், கடந்த 18 மாதங்களாக படிப்படியாக உயர்த்திவருகின்றன. இம்மாதமும், கிலோவுக்கு 30 ரூபாய் நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 2020 நவம்பரில், கோம்டு ரகம், 20ம் நம்பர் நுால் வரி நீங்கலாக 193 ரூபாயாக இருந்தது; தற்போது, இந்த ரக நுால், 362 ரூபாயாக உள்ளது. கடந்த 17 மாதங்களில், அனைத்து ரக நுால் கொள்முதல் விலையில், கிலோவுக்கு 169 ரூபாய் அதிகரித்துள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தக இழப்பு, நிதி நிலை இழப்பு, கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கப்பல் கட்டண உயர்வு என அடுக்கடுக்கான பிரச்னைகள் திருப்பூர் பின்னலாடை துறையினரை சூழ்ந்துள்ளன.பலவித இன்னல்களை எதிர்கொண்டே, வர்த்தகர்களிடம் இருந்து ஆடை தயாரிப்பு ஆர்டர்களை கைப்பற்றுகின்றனர். தடைகளை தகர்ப்பதற்காக எதிர் நீச்சலிடும் வேளையில், நுால் விலை உயர்வு, சூறாவளியாக சுழன்றடிப்பது, பின்னலாடை துறையினரை, கவலை அடையச் செய்துள்ளது.
![]()
|
சந்தைக்கு வருமா பதுக்கல் பஞ்சு
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல்: பஞ்சு, நுால் விலை உயர்வால், இந்திய ஆடை உற்பத்தி துறை பெரும் பின்னடைவை சந்தித்துவருகிறது. உலக சந்தையைவிட, நமது நாட்டில் பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதனால், வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெறமுடியாதநிலைக்கு, நமது நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட போட்டி நாடுகள், அதிக ஆர்டர்களை கவர்ந்திழுக்க துவங்கிவிட்டன.
பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும். வர்த்தகர்கள் பதுக்கியுள்ள பஞ்சை, சந்தைக்கு கொண்டுவரவேண்டும். மத்திய ஜவுளி அமைச்சர் பியூஸ்கோயலை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளோம்.
ஒற்றை தங்கமாக வளர்ச்சி
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்: கடந்த 2021 ஏப்., முதல் தற்போது வரை, கிலோவுக்கு 110 ரூபாய் ஒசைரி நுால் விலை உயர்ந்துள்ளது. நுால் கொள்முதலுக்கான நடைமுறை மூலதன தேவை இரட்டிப்பாகிவிட்டது.
கடந்த 2020ல், 200 ரூபாய்க்கு ஒரு கிலோ நுால் வாங்கமுடிந்தது; அதே தொகையில் தற்போது, அரை கிலோ நுால் மட்டுமே வாங்கமுடியும்.இதனால், திருப்பூரில் குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்கள், போதுமான அளவு நுால் கொள்முதல் செய்யமுடியாமல் தவிக்கின்றன. ஆர்டர் கிடைத்தாலும், ஆடை தயாரிக்க முடிவதில்லை. வெளிநாட்டு வர்த்தகர்களிடம், ஆடைகளுக்கு தொடர்ந்து விலை உயர்வு பெறமுடிவதில்லை. லாபத்தை இழந்து, ஆடை தயாரிக்கும் நிலைக்கு பின்னலாடை நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன.
நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெற்றுள்ளதால், ஜவுளித்துறை சிறப்பாக இயங்குவதாக அரசு கருதக்கூடாது. பெரிய தங்க புதையலில், ஒற்றை தங்கத்தை மட்டும் எடுத்தது போன்றதுதான் தற்போதைய வளர்ச்சி.சீனாவுக்குச் செல்லவேண்டிய ஆர்டர்கள் அதிகளவில் நமது நாட்டை நோக்கி வருகிறது. பல்வேறு காரணங்களால், சிறுபகுதியை வர்த்தகத்தை மட்டுமே நம்மால் கைப்பற்றமுடிகிறது. பஞ்சு, நுால் விலை சீராக இருந்திருந்தால், ஆடை ஏற்றுமதி, மேலும் சிறப்பான வளர்ச்சி நிலையை அடைந்திருக்கும்.
மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில், பஞ்சு மீதான இறக்குமதி வரியை நீக்கவேண்டும்; ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, மூலப்பொருள் கொள்முதலுக்காக அவசர கால கடன் வழங்கி கைகொடுக்கவேண்டும்.
![]()
|
லட்சம் ரூபாயை நோக்கி
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:
ஒரு கேண்டி பஞ்சு 95 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாயை நோக்கி பஞ்சு விலை பயணிக்கிறது.இதனால், நுாற்பாலைகள் முதல் ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் என ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அபரிமிதமான பஞ்சு விலை மற்றும் தரம் குறைந்த பஞ்சு காரணமாக, நுாற்பாலைகள், நுால் உற்பத்தியை குறைத்துள்ளன. ஏற்கனவே உயர்த்தப்பட்ட நுால் விலை பாதிப்புகளையே சமாளிக்க முடியாமல், பின்னலாடை உற்பத்தியாளர் தவிக்கின்றனர்.
தற்போது மீண்டும் கிலோவுக்கு 30 ரூபாய் நுால் விலை உயர்ந்திருப்பது, கவலை அளிக்கிறது. புதிய பஞ்சு சீசன் துவங்க இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. அதுவரை, பின்னலாடை உற்பத்தி துறை எப்படி மூலப்பொருள் பிரச்னையை எதிர்கொள்ளப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆடை விலையையும் உயர்த்த முடியவில்லை. பல நிறுவனங்கள், கடந்த காலங்களில் ஈட்டிய லாபத்தை, தற்போது இழந்துவருகின்றன. இக்கட்டான இந்த சூழல் குறித்து, அடுத்த வாரம் சைமாவில் அங்கம்வகிக்கும் ஆடை உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
டில்லியில் உண்ணாவிரதம்!
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்: வரலாறு காணாத நுால் விலை, இதர ஆடை தயாரிப்பு துணை பொருட்கள் விலை, ஜாப்ஒர்க் கட்டணம் உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, சம்பள உயர்வால், திருப்பூர் பின்னலாடை துறை கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.புதிய ஆர்டர்களை பெறமுடியாமல், திருப்பி அனுப்பும் சூழல் நிலவுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், பல பின்னலாட நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.
தொழில் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பது தவறு.பதுக்கல் காரணமாகவே பஞ்சு விலை உயர்ந்துள்ளது. பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த ஆயத்தமாகிவருகிறோம்.
இடியாப்ப சிக்கலில் தவிக்கிறோம்
லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம்:
திருப்பூரில் இயங்கும் உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், கொரோனாவுக்குப்பின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சிறப்பாக அமையும் என எதிர்பார்த்தோம். ஆனால், கோடை துவங்கியும் கூட, எதிர்பார்த்த அளவு ஆடை தயாரிப்பு ஆர்டர் வரவில்லை. ஆடைகளை தயாரித்து இருப்பு வைத்துவருகிறோம்.நுால் விலை உயர்வு, தொழிலை மேலும் சரிவில் தள்ளுகிறது.
40 சதவீதம் ஆடை விலையை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிறது. ஆனால், வர்த்தகர்களும், நுகர்வோரும் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. விலையை உயர்த்தாதபட்சத்தில், நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும். இப்படியொரு இடியாப்ப சிக்கலில் தவிக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், பல குறு, சிறு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பின்னலாடை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்படும்; ஏராளமான தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளோம்.பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும். வர்த்தகர்கள் பதுக்கியுள்ள பஞ்சை, சந்தைக்கு கொண்டுவரவேண்டும்.மத்திய ஜவுளி அமைச்சர் பியூஸ்கோயலை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளோம்.
ஜாப் ஒர்க் துறைக்கும் சிக்கல்
திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி சங்கிலி, நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என, பத்துக்கும்மேற்பட்ட ஜாப்ஒர்க் துறைகளை உள்ளடக்கியது. நுால் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள், அடுத்தடுத்த நிலையில் உள்ள ஜாப்ஒர்க் துறையினரையும் பாதிக்கச் செய்கிறது.
ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைவால், ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கும் ஆர்டர் இழப்பு ஏற்படுகிறது. நுால் கொள்முதலுக்கு பெருந்தொகை செலவிட வேண்டியுள்ளதால், ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு கட்டண தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.