வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவையில் 139 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கோவையில் மக்கள் போக்குவரத்து திட்டமாக (மாஸ் ரேபிட் டிரான்ஸிட்) மெட்ரோ ரயில் திட்டத்தை செயல் படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, சிஸ்ட்ரா மற்றும் ரைட்ஸ் நிறுவனங்கள் தயாரித்து, அரசிடம் சமர்ப்பித்துள்ளன. தமிழக அரசின் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.,), கோவையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதுதொடர்பாக, மிகமுக்கியமான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. முதற்கட்டமாக எந்தெந்த வழித்தடங்களில் இந்தப் பணி துவக்கப்படவுள்ளது என்பது குறித்தும் விளக்கப்படமும் காண்பிக்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக...
கோவையில் மொத்தம் 139 கி.மீ., துாரத்துக்கு மூன்று கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, அவிநாசி சாலையில்,உக்கடம்-கணியூர் வரை சத்தி சாலையில், கலெக்டர் ஆபீஸ் - வலியம்பாளையம் பிரிவு வரை என, மொத்தம் 44 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்படும். இதற்கான ஆய்வு மற்றும் திட்டஅறிக்கை தயாராகியுள்ளது. இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசின் உரிய ஒப்புதல்களுக்கு பின் பணிகளை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரண்டு கட்டங்களையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் சில பகுதிகளை சேர்த்து மொத்தமுள்ள 139 கி.மீ., துாரத்தை மேலும் நீட்டிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனியார் பங்களிப்புடன்...
மேம்பாலங்களுக்கு இணையாக மெட்ரோ ரயில்களுக்கான வழித்தடங்களை உருவாக்குவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்படும்; மேலும் புதிதாக மேம்பாலங்கள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பல்வேறு நகரங்களில் இருப்பதை போல, இரண்டு அடுக்கு அமைப்பில் செங்குத்தாக வழித்தடம் அமைக்கவும் சி.எம்.ஆர்.எல்., பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
போதிய அளவிலான 'பார்க்கிங்' வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி போன்றவற்றுடன், தற்போதுள்ள சாலைகளை கடப்பதற்கு பயன்படுத்தக்கூடிய பிற வசதிகள் உள்ள இடங்களை தேர்வு செய்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்; விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் டெர்மினல்கள் போன்ற இடங்களில் தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலம் தேர்வு செய்வது, மற்ற பணிகளை ஒருங்கிணைப்பது போன்றவை குறித்து, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு விபரங்கள் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கோவை கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுங்கரா, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாக செயல்படுத்திய நிபுணர்களின் வழிகாட்டுதலில், கோவையில் இத்திட்டம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர். திட்டம் தொடர்பான பணிகளை விரைவாக துவக்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டுக்கான முயற்சிகளையும் வேகப்படுத்த வேண்டுமென்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE