வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையில், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் தேவை. இதன் காரணமாகவே, சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், சென்னையையும், நாட்டின் பிற முக்கிய நகரங்களையும் ஒப்பிட்டு, இங்கு சொத்து வரி விதிப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:
சென்னையில், 24 ஆண்டுகளுக்கு பிறகும்; மற்ற பகுதிகளில், 14 ஆண்டுகளுக்கு பிறகும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி குடியிருப்புக்கான அதிகபட்ச சொத்து வரியாக, 3,240 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது, 4,860 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.மும்பையில், இதே அளவு குடியிருப்புக்கு, 84 ஆயிரத்து 583 ரூபாய்; புனேயில், 17 ஆயிரத்து 112 ரூபாய்; கோல்கட்டாவில், 15 ஆயிரத்து 984 ரூபாய்; பெங்களூரில், 8,660 ரூபாய் சொத்து வரி வசூலிக்கப் படுகிறது.

சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி குடியிருப்புகளுக்கான குறைந்தபட்ச சொத்து வரியாக முன்னர், 810 ரூபாய் வசூலிக்கப் பட்டது. இது, தற்போது 1,215 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே, புனேயில், 3,924; கோல்கட்டாவில் 3,510; பெங்களூரில், 3,464; மும்பையில் 2,157 ரூபாயாக வசூலிக்கப் படுகிறது.
சென்னை மாநகராட்சியில், 1,000 சதுர அடி குடியிருப்புக்கான அதிகபட்ச சொத்து வரியாக ஏற்கனவே, 9,045 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது, 13 ஆயிரத்து 568 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.இதே அளவு குடியிருப்புக்கு, மும்பையில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 973; புனேயில், 28 ஆயிரத்து 521; கோல்கட்டாவில், 26 ஆயிரத்து 640; பெங்களூரில் 14 ஆயிரத்து 433 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.எனவே, நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் தான் சொத்து வரி மிகவும் குறைவு என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.