கரூர்-இசைப் பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கிய ஜாகீர் உசேன் தலைமையில் பயிற்சி முகாம் நடக்க உள்ளதால், மாவட்ட இசைப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையில், மாவட்ட அரசு இசைப் பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞராக உள்ளார். இவர், கரூர் மாவட்ட இசைப் பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாக, அப்பள்ளி ஆசிரியை ஒருவர், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்திக்கு புகார் அனுப்பியிருந்தார்.இந்நிலையில், வரும் 8 முதல் 10ம் தேதி வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது. இதற்கு, ஜாகீர் உசேன் தலைமை வகிக்கிறார் என, தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.இது குறித்து, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது. இப்போது, ஜாகீர் உசேன் தலைமையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற சுற்றறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர் மீது புகார் அளித்து, ஒரு மாதம் கடந்த நிலையில், அரசியல் தலையீட்டால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. நாளிதழில் செய்தி வெளியான பின் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணை முடியும் வரை, இவர் தலைமையில் பயிற்சி அளிக்க கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.விசாகா கமிட்டி அமைக்க கடிதம்கலை பண்பாட்டுத் துறை இயக்குனருக்கு ஜாகீர் உசேன் அனுப்பியுள்ள கடிதம்:முதல்வருடனான துபாய் பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் சென்னை வந்தேன். கரூர் மாவட்ட பரதநாட்டிய ஆசிரியை, என் மீது புகார் தெரிவித்திருப்பதாக நாளிதழ் வாயிலாக அறிந்தேன். என் பணியானது, 17 மாவட்ட அரசு இசைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது.கடந்த பிப்., 28ல், கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றேன். மாணவர்களுக்கு சரியான வகையில் கற்பிக்கப்படாதது கண்டறியப்பட்டது. இது குறித்து, தலைமை ஆசிரியர் அறையில், அவர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால், ஆசிரியை சரியான விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், அந்த ஆசிரியை அரசியல் துாண்டுதலில், என் மீது குற்றம் சுமத்தியுள்ளார். அதை முற்றிலும் மறுக்கிறேன். மேலும், விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி, உண்மையை அனைவருக்கும் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.