சென்னை :பத்து ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ள, தி.மு.க., எந்த சிக்கலும் இன்றி, முழுமையாக அதிகாரம் செலுத்த நினைத்தது. ஆனால், மத்தியில் பா.ஜ., ஆட்சி இருப்பதாலும், தமிழக கவர்னராக ரவி இருப்பதாலும், எதையும் எளிதாக செய்ய முடியவில்லை என்ற கோபம், தி.மு.க.,வுக்கு வந்துள்ளது.
தி.மு.க. அரசும், அமைச்சர்களும் என்ன செய்கின்றனர் என்பதை கண்டறிந்து, அதில் ஏதாவது வில்லங்கம் இருந்தால், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தி விடுகிறார். அவராவது அரசியல் செய்கிறார் என கூறி, சமாளித்து விடலாம்.
ஆனால், தமிழக அரசின் தலைவராக இருக்கும் கவர்னருக்கு தெரியாமல், எதையும் செய்ய முடியாது என்பதால், தி.மு.க., தவியாய் தவித்து வருகிறது. 'நீட்' தேர்வு ரத்து போன்ற சட்ட மசோதாக்கள், ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை என, தி.மு.க.,வுக்கு அரசியல் ரீதியாக பலன் தரக்கூடிய பல முக்கிய மசோதாக்கள், கோப்புகளுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் வைத்து விட்டார்.
இது, தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், டில்லி தி.மு.க., அலுவலக திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரில் ஒருவரையாவது வர வைத்தால், டில்லி தலைமையிடம் நெருக்கமாக இருப்பதாக காட்டி, கவர்னரை சமாளித்து விடலாம் என, தி.மு.க., கணக்கு போட்டது.
அதன்படியே, டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க., - எம்.பி.,க்கள், அமித்ஷா உள்ளிட்ட முக்கியமான மத்திய அமைச்சர்களை சந்தித்து, டில்லி அலுவலக திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கினர். திறப்பு விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்தார். அப்போது, கவர்னர் ஒத்துழைக்கவில்லை என்ற தன் வருத்தத்தையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட கவர்னர், தமிழக மக்களிடம் மத்திய அரசுக்கு எதிரான எண்ணத்தை ஏற்படுத்த, தி.மு.க., அரசு என்னவெல்லாம் செய்கிறது என்பதை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வாயிலாக, மோடி, அமித்ஷாவிடம் விளக்கமாக
தெரிவித்துள்ளார்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம், அண்ணாமலையும் இதுபற்றி பேசியுள்ளார். அதனால்தான், தி.மு.க., அலுவலக திறப்புக்கு, பா.ஜ., தரப்பில் யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. தங்களின் திட்டத்தை, கவர்னர் ரவி முறியடித்து விட்டார் என்ற கோபத்தில்தான், அவரை திரும்ப பெறக் கோரி, பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் எழுப்பத் துவங்கி உள்ளனர்.