வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்
என். கந்தசாமி மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமையல் காஸ் சிலிண்டர் விலையை, 50 ரூபாய் உயர்த்தியதற்கும், பெட்ரோல், டீசல் விலையை, 50 மற்றும் 75 காசுகள் உயர்த்தியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள். இப்போது, தி.மு.க., அரசு சொத்து வரியை, 50 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி, மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இதைக் கண்டித்து, கதர்ச்சட்டை பேர்வழிகளும், தோழர்களான காம்ரேடுகளும், திருமாவளவன், வைகோ போன்ற தன்மானச் சிங்கங்களும், இதுவரை வெளிப்படையாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கூட்டணி தர்மம், குறுக்கே நின்று தொலைப்பதால், வாய்மூடி மவுனம் காக்கின்றனர் போலும்.
அ.தி.மு.க., ஆட்சியில், சொத்து வரி உயர்த்தப்பட்ட போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வானத்துக்கும், பூமிக்குமாக குதித்து தன் கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் இப்போது, 'மத்திய அரசும், மத்திய நிதி குழுவும், எங்களை கட்டாயப்படுத்தியதால் தான், சொத்து வரியை தர்ம சங்கடத்துடன், கனத்த இதயத்துடன் இந்த அளவுக்கு உயர்த்தினோம். 'இருப்பினும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் சொத்து வரி குறைவு தான்' என்று விளக்கம் தந்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. எனவே, இந்த சொத்து வரி உயர்வை மக்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க., அரசு வரியை உயர்த்தினால், வசை மாரி பொழிவதும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் வரியை உயர்த்துவது நியாயம் என்று, வியாக்கியானம் பேசுவதும், தற்போதைய அமைச்சர்களுக்கு கைவந்த கலை. சொத்து வரியை, 150 சதவீதம் வரை உயர்த்திய புண்ணியவான்கள், பஸ் கட்டணத்தையும், மின் கட்டணத்தையும், எத்தனை சதவீதம் உயர்த்தக் காத்திருக்கின்றனரோ... சொத்து வரி உயர்ந்து விட்டதால், இனி வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், அதிகமாக வாடகை செலுத்த வேண்டும். வீட்டின் உரிமையாளர்கள், 200 சதவீதம் அளவுக்கு வாடகையை உயர்த்தினாலும் ஆச்சர்யம் இல்லை.
பஸ் கட்டணம் உயரும் போது, ஆட்டோ கட்டணமும் கண்டிப்பாக உயர்ந்து விடும். அதை காரணம் காட்டி, அரசு ஊழியர்கள் தாங்கள் வாங்கும் லஞ்சத்தின் அளவையும் கணிசமாக உயர்த்திக் கொள்வர். இனி, வார்டு கவுன்சிலர்கள் வேறு, தங்கள் பங்கிற்கு, புதிதாக வீடு கட்டுவோரிடம், அதிக, 'கட்டிங்' கேட்டு, 'டார்ச்சர்' செய்வர். தி.மு.க.,வின் திராவிட மாடல் ஆட்சியில், தமிழகம் இலங்கை மாதிரி போண்டியாகி, மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றாலும் ஆச்சர்யம் இல்லை.