வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
அ.கணேசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் சாதாரண ஸ்டாலின் அல்ல; கருணாநிதியின் மகன். அதனால் தான், பதவியேற்ற போதே, நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறினேன். டில்லிக்கு சென்று யாருடைய காலிலும் விழவில்லை; தமிழகத்தின் உரிமைக்காகவே சென்றேன். வேறு எந்த காரணமும் இல்லை' என்று பெருமை பீற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.அவரது இந்த பேச்சைக் கேட்கும் நமக்கு, சிரிப்பு சிரிப்பாக வருகிறதேயன்றி, பெருமைப்பட தோன்றவில்லை.
தவிர, காலில் விழுந்து வணங்குவதை, கேவலமான காரியமாக சித்தரித்து சிந்தை குளிர்ந்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், இந்த காலில் விழுந்து கும்பிடும் கலாசாரத்தை துவக்கி வைத்ததே தி.மு.க., தான். விருதுநகரில் காமராஜரை எதிர்த்து போட்டியிட்ட, கல்லுாரி மாணவராக இருந்து, கழக வேட்பாளராக களம் இறங்கிய பெ.சீனிவாசன் தான், தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களின் கால்களில், வயது வித்தியாசம் பார்க்காமல் நெடுஞ்சாண்கிடையாக, சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் கலாசாரத்தை துவக்கி வைத்தவர். அந்த தேர்தலில் காமராஜர் தோற்று, பெ.சீனிவாசன் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து வந்த தேர்தல்கள் அனைத்திலும், வாக்காளர்களின் கால்களில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் முறையை கழகம் கடைப்பிடிக்கத் துவங்கியது. அத்துடன், பிற அரசியல் கட்சிகளும், இந்த காலில் விழும் கலாசாரத்தை காப்பியடிக்க துவங்கின.
சரி... காலில் விழுவது என்பது கேவலமா? தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலை புனருத்தாரணம் செய்த பராக்கிரம பாண்டியன், கோவிலின் கோபுர வாசலில் நெடுஞ்சாண்கிடையாக- -விழுந்து கிடப்பதை போன்று, தன் சிலையை வடிவமைத்து, எனக்கு பின், இந்த கோவிலை புனருத்தாரணம் செய்யவிருப்பவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். அவர்கள் என் உடம்பின் மீது ஏறி செல்லட்டும் என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறாராம். மேலும், பெரியோர் கால்களில், தன்னை விட மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவது என்பது ஹிந்து கலாசாரத்தில் தலையான ஒன்று. ஓ... ஸ்டாலினுக்குத் தான் ஹிந்து கலாசாரம், பண்பாடு என்றால் வேப்பங்காயாக கசக்குமே... அதனால் தான், இப்படி விஷம் கக்கி இருக்கிறார்.

இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். உங்கள் தகப்பனார் கருணாநிதியின் கால்களில் கட்சிக்காரர்கள் யாரும் விழுந்து வணங்கியது கிடையாதா... மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் கட்சியின் அநாகரிக மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான நன்னிலம் நடராசன், சென்னை பார்டர் தோட்டத்தில், ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் போது, 'தலைவராகிய கருணாநிதியை நான் பார்க்கச் செல்லும் போதெல்லாம், அவர் தன் சட்டையை கழட்டி வைத்து, என்னை முதுகு சொறிந்து விடச் சொல்வார்.
நானும் சந்தோஷமாக சொறிந்து விடுவேன்' என்று கழகத்தின் ரகசியத்தை, பொது மேடையிலேயே கக்கி இருக்கிறார். கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரையே, முதுகு சொறிந்து விடச் சொன்ன கலாசாரத்தை விட, மூத்தோர்களின் கால்களில் விழுந்து வணங்கி, ஆசி பெறுவது ஒன்றும் கேவலமில்லை மிஸ்டர் ஸ்டாலின்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE