கூடலூர்: ''மங்கலதேவி கண்ணகி கோயிலை கேரள அரசிடம் இருந்து மீட்டு சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,''என ,பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

மங்கலதேவி கண்ணகி கோயிலின் அடிவாரத்தில் உள்ள பனியன்குடியில் வனப்பாதையை பார்வையிட்ட பின் அவர் கூறும்போது:தேனிமாவட்டம் கூடலூர் பளியன்குடியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இதன் முகப்பு வாயில் மதுரையை நோக்கி அமைந்துள்ளது. 1817ல் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயிலும், 1976 ல் தமிழக--கேரள அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சர்வேயிலும் இக்கோயில் தமிழகப் பகுதியில் அமைந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தாண்டு ஏப்.16 ல் சித்ரா பவுர்ணமி விழா நடக்க உள்ளது.இக்கோயிலுக்குச் செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால் கோயிலை கேரளா உரிமை கொண்டாடி வருகிறது. தமிழக வனப்பகுதியில் இருந்து 6 கி.மீ., தூரம் தற்போதுள்ள நடைபாதையில் ரோடு வசதி ஏற்படுத்தினால் தமிழக பக்தர்கள் தடை இன்றி சென்று வர வாய்ப்பு ஏற்படும். கோயில் பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளது.

கேரள அரசிடம் இருந்து இக்கோயிலை முழுமையாக மீட்டு சீரமைப்பு பணிகள் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும், என்றார்.மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ராஜசேகர், சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, தலைவர் வெங்கடேசன், கோட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.