கோவை: 'தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என, கோவையில் உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 25 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை நான்கு வகையாக பிரித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம், கோவை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, மாமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும், 11ல் மாமன்றம் கூட்டப்பட்டு, அவசர தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
![]()
|
சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது உயர்வு விகிதத்தை சற்று குறைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரி வருகின்றனர்.இது தொடர்பாக, அரசியல் கட்சியினர் என்ன சொல்கிறார்கள்?
நிறுத்தி வைக்கணும்!
கோவை எம்.பி., நடராஜன் (மா.கம்யூ.,): மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை வந்து விட்டது. மாநகராட்சியின் வரவு - செலவு விபரங்களை கருத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு செயல்படுத்துவதை தவிர்த்து, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
நிலுவையை வசூலிங்க!
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் (பா.ஜ.,): மக்கள் சிரமப்படும் சூழல் இருக்கிறது. மத்திய அரசு கூறியதால் சொத்து வரி உயர்த்தியதாக பொய் சொல்கின்றனர். சீரான வரி விதிப்பு முறைக்கு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது.எத்தனை சதவீதம் வரி உயர்த்த வேண்டுமென மத்திய அரசு சொல்லவில்லை. நிலுவை வரியினங்களை வசூலிக்க முனைப்பு காட்ட வேண்டும். சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
உடன்பாடு இல்லை
மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் மாநில செயல் தலைவர்: சொத்து வரி உயர்வு காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. மத்திய அரசின் நெருக்கடி மற்றும் வழிகாட்டுதல் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக, மாநில அரசு காரணம் கூறியிருக்கிறது. மக்களுக்காக போராடும் மாநில அரசு, மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு பணியாமல், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரி உயர்வை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத நிலை
கார்த்திக் செல்வராஜ், தி. மு.க., கவுன்சிலர்: கடந்த, 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க.., அரசு வரி உயர்வு செய்யாமல் இருந்ததால், நிதிச்சுமை ஏற்பட்டிருக்கிறது. தவிர்க்க முடியாத சூழலால் உயர்த்தப்பட்டிருக்கிறது. சாலை வசதி மேம்படுத்துவதற்கு நிதியில்லை. சாதாரண மக்கள் பாதிக்காத வகையில், வரி உயர்வை குறைப்பதற்கு சாத்தியக்கூறு இருக்கிறது. அனைத்து மாநகராட்சி மாமன்றத்தின் கருத்துக்களை கேட்டறிந்து, குறைக்கும் நடவடிக்கைகளை, தமிழக முதல்வர் மேற்கொள்வார்.
![]()
|
சொத்தையே விற்கணும்!
பிரபாகரன், அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர்: சொத்து வரி உயர்வை சொத்தை பறிப்பது போல் இருக்கிறது. குடிநீர் கட்டண விபரங்களை மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். அத்தொகைக்கான முழு விபரம் இருப்பதில்லை. கட்டட வரைபட அனுமதி பெற, தொழிலாளர் நல நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை, 9 ஆயிரம் ரூபாயில் இருந்து, 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருக்கின்றனர்.
சரியான சமயம் இல்லை
மல்லிகா, இந்திய கம்யூ., கவுன்சிலர்: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அவர்களின் தலை மீது ஏகப்பட்ட சுமை இருக்கிறது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. வாடகையை அதிகப்படுத்த வாய்ப்பிருப்பதால், வாடகை வீடுகளில் வசிப்போர் பாதிக்கப்படுவர். சொத்து வரியை உயர்த்துவதற்கு இது சரியான சமயமாக இல்லை. எனவே, வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
கடுமையாக பாதிக்கும்
சித்ரா வெள்ளிங்கிரி, மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர்: கொரோனா பரவலால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தொழிலை இழந்திருக்கின்றனர். வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். முதலீட்டை திரும்ப எடுக்க முடியாமல் தொழில் நிறுவனத்தினர் தவிக்கின்றனர். மாநகராட்சியின் நிதி நிலைமையை சரி செய்ய, நிலுவை வரியினங்களை வசூலிக்க தீவிரம் காட்ட வேண்டும்.