திருப்பூர்: ''சொத்து வரியை உயர்த்தக்கூடாது; சொத்து வரி உயர்வு என்பது 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல் உள்ளது'' என்கின்றனர் பின்னலாடை தொழில்துறையினர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், குடியிருப்பு, தொழிற்சாலை, வணிக கட்டடம், கல்வி பயன்பாட்டு கட்டடங்களுக்கான வரி, 25 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில், சொத்து வரி உயர்வு தொடர்பாக சிறப்புக்கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்பினரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர்கள் நம்முடன் பகிர்ந்தவை:
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்:ஏற்கனவே ஏராளமான பிரச்னைகளால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை தத்தளித்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரியே போதுமானது தான். இதற்கு மேலும் வரி உயர்த்தி, மக்கள், தொழில்முனைவோரை கோபமூட்டக்கூடாது. வரி அதிகரித்தால், தொழில் துறை கடும் பாதிப்புகளை சந்திக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு சொத்து வரியை உயர்த்தக்கூடாது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்துரத்தினம்:ஜி.எஸ்.டி., - பணம் மதிப்பிழப்பு, கொரோனா பரவல் என அடுத்தடுத்த பிரச்னைகளால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, பின்னலாடை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான பஞ்சு, நுால் விலை உயர்வால், பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.சொத்து வரியை உயர்த்துவது, தொழில் வளர்ச்சியை மேலும் பாதிக்கச்செய்யும்.
திருப்பூரை பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் வாடகை கட்டடத்திலேயே இயங்குகின்றன. வரி உயர்ந்தால், கட்டட வாடகை உயர்ந்து தொழில்முனைவோருக்கு சுமையை ஏற்படுத்தும். அதேபோல், குடியிருப்புகளின் வாடகை உயர்ந்து, பின்னலாடை தொழிலாளர் மீதும் வரிச்சுமை விழும். நாட்டின் வளர்ச்சிக்கு வரி அவசியம்தான்.தொழில் வளர்ச்சிப்பாதையில் செல்லும்போது, வரி உயர்ந்தாலும், பெரிதாக தெரியாது. ஏராளமான இன்னல்களை சந்தித்துவரும் இச்சூழலில், வரி உயர்வு அறிவிப்பு, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. வரி உயர்ந்தால், பின்னலாடை துறை மேலும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, இப்போது, சொத்து வரி உயர்வு கூடாது.

சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன்:சோதனையான இந்த காலகட்டத்தில், சொத்துவரி உயர்வு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மறுபரிசீலனை செய்து, வரி உயர்வு முடிவை அரசு கைவிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பிரதிநிதிகள், தங்கள் பகுதி தொழில் பாதிப்பு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
காம்பாக்டிங் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் தற்போதைய நிலை, சொல்லித்தெரியவேண்டியதில்லை; எல்லோரும் நன்கு அறிந்ததுதான்.
இந்நிலையில், 100 சதவீதம்; 150 சதவீதம் வரி உயர்த்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.எனவே வரி உயர்வு தவிர்க்கமுடியாததுதான். அதற்காக, ஒரே நேரத்தில், பலமடங்கு வரியை உயர்த்தி மக்கள், தொழில்முனைவோர் தலையில் சுமையை ஏற்றக்கூடாது. 20 முதல் 25 சதவீதத்துக்குள் வரியை உயர்த்தினால், எல்லோரும் ஏற்றுக்கொள்வர். எதிர்காலத்தில், கலந்தாலோசித்து படிப்படியாக வரியை உயர்த்தலாம்.