-''துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி துவங்கி விட்டது. இரண்டு ஆண்டுகளில், அங்கிருந்து விண்ணில் ராக்கெட்டுகள் ஏவப்படலாம்,'' என, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்தார்.
நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
குலசேகரப்பட்டினத்தில், இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி எந்த அளவில் உள்ளது?
மூன்று ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வடிவில் இருந்த விஷயம், இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மிகப்பெரிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாருக்கு அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் துவங்கி விட்டது. இஸ்ரோ தலைவராக இருந்தபோது, இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததும், அதன் முக்கியத்துவம் உணர்ந்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
இந்த விஷயத்தில், மத்திய - மாநில அரசுகள் செயல்பாடு எப்படி?
மத்திய அரசு வாயிலாக, தமிழக அரசுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 2,233 ஏக்கர் நிலம் குலசேகரப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேவை என கூறப்பட்டது. தமிழக அரசும் ஆர்வமாக இருப்பதால், நிலம் எடுப்பு பணிகளில் தீவிரம் காட்டினர். திட்டத்துக்கு தேவையான பாதிக்கும் மேற்பட்ட நிலம் கிடைத்து விட்டது.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மொத்த இடத்தையும், தமிழக அரசு ஒப்படைத்து விடும். அதன்பின், கட்டட பணி துவங்கி விடும்.
இத்திட்டம், தமிழகத்துக்கு எந்தந்த வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தும்?
ஏவுதளம் அமைக்கப்பட்டால்,ராக்கெட்டை உருவாக்குவதற்கான கருவிகளும், உப பொருட்களும் தேவைப்படும். அவற்றை தயாரிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாகும். இதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஏவுதளத்தில், அதாவது விண்வெளி ஆய்வு நிறுவனத்திலும் வேலை வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி ஆய்வில் ஈடுபடுவோர் அதிகரிப்பர். அதனால், அது தொடர்பான படிப்புக்காக, கல்வி நிறுவனங்கள் துவங்குவர். இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்கும் போது, அவர்களின் குடும்ப வருமானம் பெருகும். அந்த பகுதியில் பொருளாதாரம் மேம்படும்.
தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் எட்ட முடியாத உயரத்துக்கு கட்டாயம் செல்லும். இதனால், அங்கிருப்போர் வாழ்க்கை தரம் உயரும். சட்டம் - ஒழுங்குக்கு விடப்பட்டிருக்கும் சவால்கள் நீங்கும்.
ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணி ஏற்கனவே மகேந்திரகிரியில் நடக்கும்போது, அந்த தொழில் நிறுவனங்கள் தமிழகத்திலும் உருவாகுமா?
மகேந்திரகிரியை பொறுத்தவரை, ராக்கெட் இன்ஜின் தயாரிப்பு மற்றும் சோதனைகள் மட்டுமே நடக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மகேந்திரகிரிக்கு உதிரிபாகங்கள் வருகின்றன. அதை வைத்துதான், ராக்கெட் இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.
குலசையில் ஏவுதளம் அமைக்கப்பட்டதும், அங்கேயே ராக்கெட்டை முழுமையாக தயாரிக்கும் சூழல் உருவாகும். இப்பகுதியை சுற்றிலும் ஆயிரக்கணக்கான ராக்கெட் உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
அதிகளவில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவ முடியுமா?
ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கிழக்கு நோக்கி ராக்கெட்டை விண்ணுக்கு ஏவுவதில் சில சிறப்புகள் உள்ளன. அதேபோல, தெற்கு நோக்கி குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணுக்கு ஏவும்போது சில சிறப்புகள் உள்ளன. குறிப்பாக, அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை, குலசேகரப்பட்டினத்தில் இருந்து தெற்கு நோக்கி பாயும் ராக்கெட் தாங்கி செல்லக் கூடியவை என்பதால், குலசேகரப்பட்டினத்தை கொஞ்சம் சிறப்பாக சொல்லலாம்.
அதிக எடை செயற்கைக் கோள்களையும் தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை, குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும் வசதி உருவாகும்போது, வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடியும்.
வெளிநாட்டு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் போது, அதற்காக பல கோடி ரூபாயை, அந்த நாடு கொடுக்கும். அந்த வகையில், பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். குலசேகரப்பட்டினம், புயல் போன்ற பேரிடர் அச்சுறுத்தல் இல்லாத இடம். பருவ கால மாற்றங்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகாத பகுதி.
விண்வெளி ஆய்வில் பல ஆண்டுகள் பின்தங்கிய நிலையில், குலசேகரப்பட்டினம் ஏவுதளம் அமைக்கப்பட்ட பின், பல படிகள் முன்னேற்றம் காணுவோம் என்கின்றனரே?
நிச்சயமாக. அதிக அளவில் ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவும் நிலை உருவாவதால், இந்தியா விண்வெளி ஆய்வில் பல படிகள் முன்னேறலாம்.
ராக்கெட் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை, அருகில் இருக்கும் நாங்குனேரியில் உள்ள 'சிப்காட்' நிலத்தில் அமைக்கலாம் என்கின்றனரே?
சிப்காட் நிலத்தை, ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கொடுத்து, தொழில் வளத்தை பெருக்கலாம். ஒருவேளை, அந்த இடம் கிடைப்பதில் சிக்கல் என்றால், தென் மாவட்டங்களில் இருக்கும் ஏராளமான தரிசு நிலங்களை அரசு ஒதுக்கலாம்.
ஏவுதள பணி எப்போது முடிவு பெறும்? முதல் ராக்கெட் எப்போது ஏவப்படும்?
இத்தனை காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும் என அறுதியிட்டு சொல்ல முடியாது. இருந்தாலும், இப்போதுள்ள வேகத்தை பார்க்கும்போது, இரண்டு ஆண்டுகளில் மொத்த பணிகளும் முடிந்து, மிக விரைவிலேயே ராக்கெட்கள் ஏவப்படலாம். இவ்வாறு சிவன் கூறினார்.
- நமது நிருபர் -