குற்றவாளிகளின் அடையாளங்களை பதிவு செய்வது தொடர்பான குற்றவியல் நடைமுறை அடையாள சட்ட மசோதா, பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது.'நவீன கால குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றங்களை கோர்ட்டில் நிரூபணம் செய்யவும், இந்த புதிய சட்டம் அவசியம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
அவசியம்
இந்த மசோதா மீதான விவாதத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:தற்போது நடந்து வரும் புதிய தலைமுறை குற்றங்களை தடுக்க, அதிநவீன தொழில்நுட்பங்களும் சட்ட விதிமுறைகளும் அவசியம். அந்த அடிப்படையில் தான், புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.மேலும், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிகளை உட்புகுத்தி, விசாரணை நடைமுறையை வலுப்படுத்துவதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகரிப்பதும் தான், குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவின் நோக்கம்.
தற்போதைய சூழலில், கொலை வழக்குகளில், 100க்கு 66 பேரும், கொள்ளை வழக்குகளில், 100க்கு 70 பேரும், ஆதாரம் இன்றி விடுவிக்கப்படுகின்றனர். புதிய சட்டத்தின் வாயிலாக, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரிக்கும். இந்த சட்டமானது, குற்றவாளிகளை காட்டிலும், இரண்டு படிகள் போலீசார் முன்னணியில் இருப்பதற்கு வாய்ப்பாக அமையும். குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கே, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில், மிகவும் கடுமையான அடையாள சட்டங்கள் அமலில் இருக்கின்றன. எனவே தான், அந்த நாடுகளில் குற்ற வாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் அதிகமாக இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
புதிய சட்டம் என்ன சொல்கிறது?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம், குற்றவாளிகளிடம் இருந்து என்ன அடையாள தரவுகளை சேகரிக்கலாம், யாரிடம் இருந்து சேகரிக்கலாம், அப்படி சேகரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை வரையறை செய்கிறது
கடந்த 1920ம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் தான், இத்தனை ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. இதன்படி, குற்றவாளிகளின் கை ரேகை, கால் அச்சுப்பதிவு சேகரிக்கலாம். புகைப்படம் எடுக்கலாம்
புதிய சட்டப்படி, கையெழுத்து மாதிரி, ரத்தம், விந்து, தலைமுடி மாதிரி, கருவிழி ஸ்கேன், உமிழ் நீர் மாதிரிகள் எடுக்கலாம். டி.என்.ஏ., ஆய்வுக்கும் உட்படுத்தலாம்
எந்த ஒரு குற்றத்தின் கீழும் தண்டிக்கப்பட்டவர் அல்லது கைது செய்யப்பட்டவரிடம் இருந்து, உயிரியல் மாதிரிகளை பெறலாம். ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அல்லது குறைந்தபட்சம் ஏழாண்டு சிறை தண்டனைக்குரிய குற்றம் செய்தவர்களிடம் இருந்து மட்டுமே, கட்டாயப்படுத்தி உயிரியல் மாதிரிகளை பெற முடியும்
எந்த ஒரு தடுப்புச் சட்ட உத்தரவுப்படியும் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து, உயிரியல் மாதிரிகளை பெறலாம் விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும் எனில், மாஜிஸ்திரேட் உத்தரவு பெற்று, எவரிடம் இருந்தும் உயிரியல் மாதிரிகளை பெறலாம்
போலீஸ் ஸ்டேஷனுக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரி அல்லது தலைமை காவலர் அல்லது அதற்கு மேல் பொறுப்பு வகிப்பவர், இந்த உயிரியல் மாதிரிகளை பெறலாம். சிறைகளில், தலைமை வார்டன் இந்த உயிரியல் மாதிரிகளை பெறலாம்
மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பு ஜுடீசியல் மாஜிஸ்திரேட் இதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியும் நன்னடத்தை காலத்தில் இருக்கும் ஒருவரிடம் இருந்து உயிரியல் மாதிரிகளை பெறுவதற்கு, நிர்வாக மாஜிஸ்திரேட்டும் உத்தரவிட முடியும்
சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரி தரவுகள் அனைத்தும், தேசிய குற்ற ஆவண காப்பகம் வாயிலாக பராமரிக்கப்படும். எந்த ஒரு விசாரணை அமைப்பும், மாநில அரசும், இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்
உயிரியல் மாதிரி சேகரிக்கப்பட்ட ஒருவர், அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டால், அவரது உயிரியல் மாதிரி தரவுகள் அனைத்தும் அழிக்கப்படும்.நாட்டுக்கு வரப்பிரசாதம்மூத்த வக்கீல் முனைவர் ஆர்.சண்முகம்: பிரிட்டிஷ் ஆட்சியில், 1920ம் ஆண்டில் பழைய சட்டம் கொண்டு வந்தபோது, மக்கள் தொகை 25 கோடி மட்டுமே. குற்றங்களும் குறைவாகவே நடந்தன.
இப்போது, மக்கள் தொகை 139 கோடி. குற்றங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. குற்றங்களின் தன்மையும் கடுமையாகி விட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் மூன்றாம் தலைமுறை குற்றங்கள், நாடெங்கிலும் நடக்க ஆரம்பித்து விட்டன.குற்றவாளிகள், வெகு எளிதாக மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு செல்லும் நிலைமையும் வந்துவிட்டது
.இத்தகைய குற்ற வாளிகளை பிடிக்கவும், அவர்கள் மீதான குற்றத்தை கோர்ட்டில் நிரூபணம் செய்யவும், பழைய சட்டம் போதாது. எனவே தான், 'பயோ மெட்ரிக்' அடையாளங்கள் சேகரிக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அடையாள ஆதாரங்கள், குற்றவாளிகளை அறிவியல்பூர்வமாக கண்டறிய வும், தண்டனை பெற்றுத் தரவும் பேருதவியாக இருக்கும்.தனி மனித சுதந்திரத்தை காட்டிலும், தேசப் பாதுகாப்பு தான் முக்கியம். அந்த வகையில், இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
மக்களை பாதுகாக்கும் சட்டம்
மூத்த குற்றவியல் வக்கீல் முனைவர் ஏ.பி.ஜெயச்சந்திரன்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம், குற்றவாளிகளின் 'பயோமெட்ரிக்' அடையாளங்களை பெறுவதற்கு வழி வகை செய்கிறது. இப்போதைய நவீன காலத்தில் நடக்கும் குற்றங்களை கண்டறிய, பழைய தொழில்நுட்பமும், அதற்கு பயன்பட்ட சட்டமும் போதுமானதாக இல்லை.
அன்றைய காலத்தில், ரத்தப் பரிசோதனை செய்வதற்கும், அதை ஒப்பீடு செய்து சரி பார்த்து முடிவுகளை பெறுவதற்கும் வாரக்கணக்கில் ஆகும். இப்போது, அதில் முன்னேற்றங்கள் வந்து விட்டன. அதை நாம் பயன்படுத்துகிறோம். அதைப் போலவே, சட்டத்திலும் நவீன மாற்றங்களையும், தொழில் நுட்பங்களையும் கொண்டு வருவது அவசியம்.இது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு, எந்த விதத்திலும் விரோதமானது இல்லை.
நவீன கால குற்றவாளிகளை பிடிக்கவும், அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும், இந்த சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அத்தியாவசியமான சட்டம்ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., ரத்தினசபாபதி: நேற்று என்ன தொழில்நுட்பம் இருந்ததோ, அதை இன்று பயன்படுத்த முடியாது. இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை, நாளை பயன்படுத்த முடியாது என்பதே நடைமுறை உண்மை. அந்த வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம், காலத்துக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ள அவசியமான மாற்றம். பழைய சட்டப்படி, ஒரு குற்றவாளியிடம் அடையாளங்களை தரும்படி கேட்கவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது.
ஆனால், இப்போது, பல விதமான நுாதன குற்றங்கள் நடக்கின்றன.குளோனிங், சைபர் கிரைம், வெகு தொலைவில் இருந்து கொண்டே இன்னொரு இடத்தில் ஒரு குற்றச்செயலை செய்வது என்பன போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்திருந்தாலோ, முக கவசம் அணிந்திருந்தாலோ, ஒரு ஆளை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம்.
இப்படி நுாதனமாக குற்றங்கள் நடக்கும் வேளையில், வெறும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.அதற்கு, குற்றவாளியின் பயோ மெட்ரிக் அடையாளங்கள் மிகவும் அவசியம். கோடிக்கணக்கான நல்லவர்களை பாதுகாப்பதற்காக, குற்றம் செய்யும் ஓரிருவரின் உரிமையை பறிப்பதில் தவறில்லை
.அந்த நோக்கத்துடன் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நவீன மாற்றம், அத்தியாவசியமானது; பாராட்டத் தக்கது.காலத்துக்கேற்ப மாற்றம் அவசியம்ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., வேலு: கிரிமினல் குற்றவாளிகள் எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.அவற்றை கண்டுபிடிக்கும் விசாரணை அமைப்புகளுக்கு உதவி செய்யவே, மத்திய அரசு பயோ மெட்ரிக் தகவல் சேகரிப்புக்கு சட்டம் கொண்டு வந்துள்ளது.காலத்துக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம், மிகவும் அவசியமானது
.சாதாரண பொதுமக்களை காட்டிலும், கிரிமினல் குற்றங்களை செய்வோர் அதிபுத்திசாலிகளாக இருக்கின்றனர். 'தங்களை பிடிக்க, போலீசார் என்ன தந்திரங்களை கையாள்கின்றனர்' என்பதை புரிந்து கொண்டு, சிக்காமல் தப்பிச் செல்வதற்கு, பல வழிகளிலும் முயற்சிக்கின்றனர்.
அவர்களது நோக்கத்தை முறியடிக்க, மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருத்தமானது. இந்த சட்டம், அடிப்படை உரிமையை பறிப்பதாக எழும் விமர்சனங்கள், அரசியல் நோக்கம் கொண்டவை.அப்பாவி மக்கள் நலன் கருதி, அரசு எடுக்கக்கூடிய இந்த நடவடிக்கை, மிகவும் வரவேற்கத்தக்க அம்சம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE