வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
ச.வினாயகம், வடக்கூர், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குஜராத்தியர்கள். அவர்கள் குஜராத்தியுடன், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளையும் கற்றுத் தேர்ந்து உள்ளனர். அதுதவிர, வேறு சில மொழிகளையும் கற்றிருக்கலாம். ஆனால், 'ஆங்கிலத்துக்கு பதிலாக, ஹிந்தி மொழியில் பேச வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதை திசை திருப்பி, இங்குள்ள கட்சிகள் அரசியலாக்க துவங்கி உள்ளன.
ஒரு மொழியை கற்றுக் கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள், அதை கொலை குற்றமாகவே பாவித்து, எதிர்ப்பு காட்டி வருகின்றன. பிரதமர் மோடியை பொறுத்தவரை, அவர் எந்த மொழியையும் எதிர்ப்பவர் அல்ல. தமிழகத்திற்கு வந்து உரையாற்றும்போது, வெறும் நன்றி, வணக்கம் மட்டும் கூறாமல், திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி, கொஞ்சும் தமிழில் உரையாற்றுகிறார். அவருக்கு யாரும், 'டப்பிங்' கொடுப்பதில்லை.

தமிழகத்தை தவிர, நாட்டில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும்-, தங்களின் தாய்மொழியுடன், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியையும் கற்று வருகின்றனர். அவ்வளவு ஏன், கழக பிரமுகர்கள் நடத்தும் பள்ளிகள் அனைத்திலும், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி மற்றும் ஹிந்தி மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. திராவிட கட்சிகளுக்கு உண்மையில் தமிழ் பற்று மிகுந்து இருந்தால், அவர்கள் நடத்தும் பள்ளிகளில், 'இனி ஹிந்தி பயிற்றுவிக்கப்படாது' என்று சொல்லட்டும் பார்க்கலாம்.
முதல்வரின் தங்கையே, ஹிந்தியில் வெளுத்து வாங்குவார். திருச்சி சிவா எம்.பி.,யோ, ஹிந்தி சினிமா பாட்டுக்களை அட்சர சுத்தமாக பாடுவார். அய்யா... நாம் தெரியாமல் தான் கேட்கிறோம்... சமீபத்தில், துபாய், அபுதாபிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினர், அந்த நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழில் பேசித்தான், முதலீடுகளை ஈட்டி வந்தார்களா அல்லது அரேபிய மொழியில் பேசி ஈட்டி வந்தார்களா?
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான், ஹிந்தியின் மீது வெறுப்பை உமிழ்ந்து, தமிழர்களும், தமிழகமும், உருப்படவிடாமல் தடுத்து கொண்டிருக்க போகிறீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா திராவிட செம்மல்களே?