வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லூதியானா-எல்.கே.ஜி., மாணவி, பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளியின் நிர்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பஞ்சாபில் நேற்று தனியார் கல்வி நிறுவனங்கள் 'ஸ்டிரைக்' நடத்தின.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., படிக்கும் சிறுமி, பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வீட்டுக்கு வந்த பின் வலியால் துடித்த சிறுமியை, தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, குழந்தையின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் பள்ளி நிர்வாகியை கைது செய்தனர்.இதற்கு, பஞ்சாப் மாநில தனியார் பள்ளிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கைதை கண்டித்து, மாநிலம் முழுதும் உள்ள 5,000 தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகள் நேற்று மூடப்பட்டன.
இதுகுறித்து, பஞ்சாப் மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி மன்மோகன் சிங் கூறியதாவது:-குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆனால், போலீசார் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், பள்ளி நிர்வாகியை கைது செய்திருப்பது முறையல்ல.
இதுபோல அரசுப் பள்ளியில் நடந்திருந்தால், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரையோ அல்லது மாவட்ட கல்வி அதிகாரியையோ போலீசார் கைது செய்வரா. உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், மாநிலம் முழுதும் சாலை மறியல் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE