புதுச்சேரி : பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணிடம் 'இலவசமாக தையல் மிஷின் வாங்கித் தருகிறேன்' என ஆசை வார்த்தை கூறி, 10 சவரன் தாலி செயினை 'அபேஸ்' செய்த அடையாளம் தெரியாத பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி சண்முகாபுரம், வி.எம். கார்டன், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணபவன். இவரது மனைவி லட்சுமி, 43; இவர், சண்முகாபுரம் காமராஜர் சாலையில், பியூட்டி பார்லர் நடத்திக் கொண்டு, தையல் தொழிலும் செய்து வந்தார்.
கடந்த 9ம் தேதி மதியம் பியூட்டி பார்லருக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஒரு கிறிஸ்துவ அமைப்பில் வேலை செய்வதாக கூறி, அறிமுகப்படுத்தி கொண்டார். தங்கள் அமைப்பு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தையல் மிஷின் கொடுத்து, துணி தைப்பதற்கான ஆர்டரும் கொடுக்கிறோம் என கூறினார். மேலும் 'எங்கள் அமைப்பின் மூலம் உங்களுக்கு தையல் மிஷின் மற்றும் ஆடைகள் தைப்பதற்கான ஆர்டர் வாங்கித் தருகிறேன். நீங்கள் சம்மதித்தால் இப்போதே எங்கள் நிர்வாகியை அழைத்து வருகிறேன்.
அவர் வரும்போது நீங்கள் நகை ஏதும் அணிந்திருக்க கூடாது' என கூறியுள்ளார். இதனால் லட்சுமி தனது கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை கழற்றி, மேஜை டிராயரில் வைத்து பூட்டினார். அதையடுத்து அப்பெண், லட்சுமியிடம் ஒரு துணியை கொடுத்து தைக்குமாறு கூறினார். தொடர்ந்து, கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகியை அழைத்து வருவதாக கூறிவிட்டு புறப்பட்டார். அவர் சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த 10 சவரன் தாலி செயின் மாயமாகி இருப்பதை கண்டு லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.இது தொடர்பாக லட்சுமி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அடையாளம் தெரியாத பெண் மீது மோசடி வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.