வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டத்தை வழிநடத்துவது குறித்து, அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், நிர்வாக செயல்பாடுகளுக்கு உறவினர்களை முன்னிறுத்தி, தள்ளியே நிற்கும் பெண் கவுன்சிலர்களுக்கும் பயிற்சி அளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.முதல்வர் உத்தரவுப்படி, இந்த ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 102ல் பெண்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இவர்களில் 82 பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். இவர்களில், பட்டியலினத்தை சேர்ந்த பெண் கவுன்சிலரான பிரியா, சென்னை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல், 15 மண்டலங்களில், திரு.வி.க., நகர் மண்டலக்குழு தலைவராக சரிதா நியமிக்கப்பட்டார். மேலும், ஆறு நிலைக்குழுக்களில் சுகாதாரத்துக்கு சாந்தகுமாரி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுவுக்கு சர்பஜெயாதாஸ் ஆகிய பெண் கவுன்சிலர்கள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இப்படி பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநகராட்சி மேயர் என்ற அதிகாரம் வழங்கியும், அவற்றை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பெண் கவுன்சிலர்கள் பணிகள், அதிகாரங்களில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களான கணவர், தந்தை, மகன் உள்ளிட்டோர் தலையிடுகின்றனர்.
வார்டு அலுவலகங்களிலும் பெண் கவுன்சிலர்கள் இருந்தாலும், கவுன்சிலருக்கான இருக்கையிலும் குடும்ப ஆண்களே அமர்ந்து பணியாற்றுகின்றனர். குடும்ப பெண்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று, நிழல் கவுன்சிலர்களாக குடும்ப ஆண்கள் உலா வருகின்றனர்.

இதேபோல், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும், பொறுப்புணர்ந்து செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. மேயர் அறையில் எப்போதும் அவரது தந்தை ராஜன் உடன் இருந்து, மேயருக்கான பணிகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எம்.காம்., பட்டதாரியான மேயர் பிரியா, கவுன்சிலராக பொறுப்பேற்றதிலிருந்து, மேயர் பதவியேற்று, முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றது வரை, செய்தியாளர்களை சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்.
அதே போல், மாநகராட்சி கூட்டத்தை நடத்துவதிலும் ஆர்வம் காட்டாத அவர், துணை மேயரின் தன் பொறுப்புகளை ஒப்படைப்பது, பொதுமக்கள் மட்டுமின்றி, அதிகாரிகள் மட்டத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள், மாநகராட்சி அதிகாரிகள் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தி.மு.க., தலைமை அளித்த வாய்ப்பை, மேயர் பிரியா முறையாக பயன்படுத்தாததால், கட்சித் தலைமைக்கு வருத்தமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி நிர்வாகம், கூட்டத்தை வழி நடத்துதல் போன்றவை குறித்து, மேயருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், நேரடியாக செயல்படாமல், உறவினர்களை முன்னிறுத்தும் பெண் கவுன்சிலர்களுக்கும் பயிற்சி அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடரும் ஆணாதிக்கம்!இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அனைவருக்கும், ஒரே 'சீரியல்' அடிப்படையில் மொபைல் எண்கள் அளிக்கப்பட்டது. ஆனால், அவற்றை பல கவுன்சிலர்கள் ஒரு வாரமாகியும் பயன்படுத்த துவங்கவில்லை.

பயன்பாட்டில் உள்ள எண்களை மாநகராட்சி அதிகாரிகள் அழைத்து பேசிய போது, பெண் கவுன்சிலர்கள் எண்களில் பெரும்பாலும் குடும்ப ஆண்களே எடுத்து பேசினர்.மேலும், மாநகராட்சி பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
அதற்கு பெண் நிலைக்குழு தலைவர்களை அழைத்தப்போதும், அவர்களது குடும்ப ஆண் உறுப்பினர்களே எடுத்து பேசினர்.எம்.காம்., பட்டதாரியான மேயர் பிரியாவுக்கு, மாநகராட்சியின் கட்டமைப்புகள், துறைகள், பணிகள் உள்ளிட்டவை பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனாலும், அவற்றை முறையாக தெரிந்து கொள்ள அவர் தயராக இருப்பதாக தெரியவில்லை. நிர்வாகம் சார்ந்த கூட்டத்திலும், துணை மேயரே வழிக்காட்டுகிறார்.மாநகராட்சி பட்ஜெட்டின்போதும், துவக்க உரையை மட்டுமே படித்த மேயர் பிரியா, கூட்டத்தை நடத்தும் பொறுப்பை துணை மேயருக்கு வழங்கினார்.
இது குறித்து, முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.மேயர் பிரியாவுக்கு கூடுதல் பயிற்சிஅளிக்கவும், பெண் கவுன்சிலர்களுக்கு தங்கள் பணிகள் குறித்து பயிற்சிஅளித்து, நிழல் கவுன்சிலர்களை தடுக்கவும் முதல்வர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். நிழல் கவுன்சிலர்கள் மீது பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால், அவர்கள் மீதும், கவுன்சிலர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -