மக்கள் பிரச்னைகளை கவனியுங்கள்: தமிழக பா.ஜ.,வுக்கு முதல்வர் அறிவுரை| Dinamalar

மக்கள் பிரச்னைகளை கவனியுங்கள்: தமிழக பா.ஜ.,வுக்கு முதல்வர் அறிவுரை

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 12, 2022 | கருத்துகள் (292) | |
சென்னை: ''மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில், கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள்,'' என, பா.ஜ.,வுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூறினார்.சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:பா.ஜ., - வானதி சீனிவாசன்: சென்னை, மேற்கு மாம்பலத்தில் அமைந்து உள்ள, 'அயோத்தியா மண்டபம்' கலாசார, ஆன்மிக அன்பர்களால் துவக்கப்பட்ட அமைப்பு. ஹிந்து சமய அறநிலையத் துறை
BJP,MK Stalin,DMK, Stalin,திமுக,பாஜ,ஸ்டாலின்

சென்னை: ''மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில், கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள்,'' என, பா.ஜ.,வுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூறினார்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


பா.ஜ., - வானதி சீனிவாசன்: சென்னை, மேற்கு மாம்பலத்தில் அமைந்து உள்ள, 'அயோத்தியா மண்டபம்' கலாசார, ஆன்மிக அன்பர்களால் துவக்கப்பட்ட அமைப்பு. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை.latest tamil news


அமைச்சர் சேகர்பாபு: இந்த சமாஜம், 1958ல் உருவாக்கப்பட்டது. இதன் நிறுவனர், பல்வேறு முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார். இது குறித்து, 2013ல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சமாஜம் மேற்கொள்கிற அனைத்து நடவடிக்கைகளும், அறநிலையத் துறை சட்டத்திற்கு எதிரானது என அறிக்கை அளிக்கப்பட்டது.தேனாம்பேட்டை சுப்பிரமணியாமி கோவில் செயல் அலுவலர், சமாஜத்திற்கு தக்காராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சமாஜம் தரப்பில், மேல்முறையீடு செய்தனர்; தடையாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் தடையாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை தள்ளுபடி செய்தது. மேல்முறையீடு செய்வதாக இருந்தால், அதிகாரியிடம் முறையீடு செய்து தீர்வு காணும்படி கூறியிருந்தது.கடந்த, 2013ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமலுக்கு கொண்டு வர, நேற்று முன்தினம் அதிகாரிகள் அங்கு சென்றனர். உறுப்பினர் சார்ந்துள்ள கட்சி தலைவர், 50 பேரை திரட்டி வந்து, பூட்டு போடுகிறார். அறநிலையத் துறை அதிகாரிகள் மீது கல் எறிந்துள்ளனர்.இதுகுறித்து, மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தாசில்தார் வரவழைக்கப்பட்டு, சமாஜம் பொறுப்பை, ஏற்கனவே நியமிக்கப்பட்ட தக்கார் வழியாக, அறநிலையத் துறை ஏற்றது. அதன் திருமண மண்டபம், காரிய மண்டபம் கைப்பற்றப்பட்டன. கூட்டாக சேர்ந்து பக்தர்கள் பணத்தை சுரண்டும் கூட்டம் அங்கு செயல்படுகிறது.குறிப்பிட்ட சமுதாயத்திற்கு, முதல்வர் எதிரானவர் என்பதுபோல் பேசுகின்றனர். ஏதேனும் ஒரு மாயை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தி, அதில் குளிர் காய்ந்து, களம் அமைக்கலாம் என நினைத்தால், இது திராவிட மாடல் ஆட்சி; முதல்வர் எந்த வகையிலும் வளைந்து கொடுக்க மாட்டார்.latest tamil news


முதல்வர் ஸ்டாலின்: இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். பா.ஜ., கட்சியை சேர்ந்த உறுப்பினருக்கு அன்பான வேண்டுகோள். ஏழை மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில், நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள்.பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்துகிற முயற்சியில், நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், நம் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி குறித்து விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடத்தில், குறிப்பாக பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்து, அதை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்து, நீங்கள் நடக்க வேண்டும். தேவையில்லாமல் இதில் அரசியலை புகுத்தி, அதன் வழியாக உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என நினைத்தீர்கள் என்றால், அது நடக்கவே நடக்காது. இவ்வாறு விவாதம் நடந்தது.
அயோத்யா மண்டப பூட்டு உடைத்த அதிகாரிகள்; பொதுமக்கள், ஆன்மிகவாதிகள் கொந்தளிப்பு


சென்னை : சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்படும் அயோத்யா மண்டபத்தின் பூட்டை உடைத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், மண்டபத்தை கைப்பற்றும் முயற்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது' எனக் கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.latest tamil newsசென்னை மேற்கு மாம்பலம், ஆரியகவுடா சாலையில் உள்ள அயோத்யா மண்டபம், 1954ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மண்டபம் அப்பகுதியின் அடையாளமாக திகழ்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முதல், ஹிந்துக்களின் அனைத்து விதமான பூஜைகளும் இங்கு தினந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. காஞ்சி மகா பெரியவர், இந்த மண்டபம் தழைத்தோங்க அருளிச் செய்தார்.இந்த மண்டபத்தை நிர்வகித்து வந்த 'ஸ்ரீராம் சமாஜ்' அமைப்பு, நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், 2014ம் ஆண்டு இம்மண்டபம், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, ஸ்ரீராம் சமாஜ் அறக்கட்டளை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மண்டபத்தில் கடவுள் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுவதால், இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை முன்வைத்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றது. மேலும், ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அயோத்யா மண்டபத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், மண்டபத்தை அவசர கதியில் ஹிந்து அறநிலையத்துறை கைப்பற்ற முயற்சிப்பதாக, ஸ்ரீராம் சமாஜ் அறக்கட்டளையினர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆன்மிகவாதிகள் நேற்று காலை மண்டபத்தின் வாயிலை பூட்டி, அதன் முன் அமர்ந்து பஜனை பாடல்கள் பாடியும், அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், அதிகாரிகளை மண்டபத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ஆரியகவுடா சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதிகாரிகள் சமரசம் பேசியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். பின், மதியம் மாம்பலம் வட்டாட்சியருடன் வந்து, அவர் முன்னிலையில் மண்டபத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், பா.ஜ., மாநில செயலர் கரு.நாகராஜன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்து, அசோக் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
சட்டத்திற்கு புறம்பானது!


ஹிந்து சமய அறநிலையத்துறை, அறமற்ற துறையாகச் செயல்படுகிறது. உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில், பஜனை மடத்தை அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும் என தெரிவிக்கவில்லை. உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் பஜனை மடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இந்த மண்டபத்திற்கான செயல் அலுவலர் நியமனம் செல்லாது. இங்கிருப்பது கோவில் அல்ல; அறக்கட்டளையின் பஜனை மண்டபம்.


நீதிமன்ற தீர்ப்பில், ஸ்ரீராம் சமாஜ் அறக்கட்டளையில் நிர்வாக ரீதியாக முறைகேடுகள் நடந்திருந்தால் அதை சரி செய்து விட்டு, குறிப்பிட்ட காலத்தில் அறநிலையத்துறை வெளியேறிவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், 2014ல் ஹிந்து சமய அறநிலையத்துறை, மண்டபத்தை கைப்பற்றிய உடன், அதற்கு எதிராக தடை பெற்றுவிட்டோம். தற்போது மீண்டும் அவசரகதியில் கைப்பற்றும் முயற்சி நடக்கிறது. பஜனை மண்டபத்தை கைப்பற்ற முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது.


- உமா ஆனந்தன், 134வது வார்டு கவுன்சிலர், பா.ஜ.,
ஹிந்து விரோதப்போக்கு!


தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா பரவியுள்ளது. கூட்டுப் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அவற்றை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத் தவிர்த்து, நியாயத்திற்காக போராடுபவர்களுக்கு எதிராக காவல் துறையினர் செயல்படுகின்றனர். ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலையில் முதல்வர் செயல்படுகிறார்.


நீதிமன்றத்தில் முழுமையான உத்தரவுக்குப் பின், உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக நோட்டீஸ் அல்லது உரிய கால அவகாசம் கூட தராமல் அறநிலையத்துறை அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களுக்காக செயல்படும் மண்டபத்தை அபகரிக்க நினைப்பது தவறு. இதை ஹிந்து விரோதப் போக்கு என்றே கருதுகிறோம்.


- கரு.நாகராஜன், மாநில செயலர், பா.ஜ.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X