எஸ்.ஐ., மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி:இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 13, 2022 | Added : ஏப் 13, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்எஸ்.ஐ., மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி மணல் கடத்தி வந்த 4 பேர் கைது விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சப் இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து, மணலுடன் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில்
தமிழக நிகழ்வுகள்
எஸ்.ஐ., மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி மணல் கடத்தி வந்த 4 பேர் கைது
latest tamil newsவிக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சப் இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து, மணலுடன் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பனையபுரம் - திருக்கனுார் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த டி.என்.25 எப் 9696 - டி.என்.52 பி 4105 ஆகிய 2 லாரிகளை நிறுத்தும்படி சைகை காண்பித்தனர்.

லாரியை, சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மீது மோதுவது போல் வேகமாக வந்து பிரேக் போட்டு நிறுத்தினர். போலீசார் லாரியை சோதனை செய்ததில் 2 லாரிகளிலும், ரெட்டிக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.அப்போது, 2 லாரிகளில் வந்த டிரைவர்கள், கிளீனர்கள் 4 பேரும் சேர்ந்து சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து தரக்குறைவாக பேசினர்.

விசாரணையில் டிரைவர்கள், விழுப்புரம், சாலாமேடு ராஜா, 37; ராதாபுரம் அய்யப்பன், 32; என்பதும்; கிளீனர்கள் மல்ராஜன்குப்பம் கனகராஜ், 30; சாலாமேடு சுபாஷ், 30; என்பதும் தெரியவந்தது.சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து மணல் கடத்திய 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்பேரூராட்சியில் ரூ.90.93 மோசடி; இரண்டாவது நாளாக விசாரணைபுவனகிரி : புவனகிரி பேரூராட்சியில் ரூ.90.93 லட்சம் மோசடி குறித்து நேற்று இரண்டாம் நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கடலுார் மாவட்டம், புவனகிரி தேர்வு நிலை பேரூராட்சியில் கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து கம்ப்யூட்டர் பிரிவில் தற்காலிக ஊழியராக பணி புரிந்தவர் புவனகிரி அடுத்த கீழமணக்குடி வீரமுத்து மகன் வீரமணி,29;

இவர், இங்கு செயல் அலுவலராக பணி புரிந்த அப்துல்சாதிக்பாஷா என்பவரின் கையெழுத்தை 2 காசோலைகளில் முறைகேடாக பதிந்து , ரூ. 90 லட்சத்து 93 ஆயிரத்து 400 மோசடி செய்தது 2021-2022ம் ஆண்டு தணிக்கையின் போது தெரிந்தது.இது குறித்து தற்போதைய செயல் அலுவலர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து வீரமணியை கைது செய்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன், தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி உட்பட 10 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நேற்று முன்தினம் புவனகிரி பேரூராட்சி அலுவகத்திற்கு வந்து அனைத்து கோப்புகள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்தனர்.

நேற்று இரண்டாவது நாளாக உள்ளாட்சி தணிக்கைத் துறை ஆய்வாளர்கள் நடராஜன், துரைராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, பணியில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க பா.ஜ., மனுஇது குறித்து பேரூராட்சிகளின் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பா.ஜ., மூத்த பிரமுகர் கனகராஜன் அனுப்பியுள்ள மனு: புவனகிரி பேரூராட்சியில் ரூ. 90 லட்சத்து 93 ஆயிரத்து 400 மோசடியை தற்காலிக பணியாளர் மட்டும் செய்திருக்க முடியாது. மேலும் பலர் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது. தற்போது அதிகாரிகள் முகாமிட்டு பெயரளவில் ஆய்வு மற்றும் விசாரணை செய்கின்றனர். இது கண் துடைப்பிற்கு நடக்கிறது. இதனால் மேலும் பல உண்மைகள் மறைக்க வாய்ப்புள்ளது. எனவே மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


கழுத்தறுத்து தற்கொலை முயற்சி கடன் தொல்லையால் விபரீதம்விருத்தாசலம் : கடன் தொல்லையால் கழுத்தை அறுத்து ஒருவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி பெரியகண்டியங்குப்பம் நகராட்சி குப்பை கிடங்கு நுழைவு வாயில் முன், நேற்று காலை 6 மணியளவில் 40 வயது நபர் கழுத்து, கை அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பின், அங்கு கிடந்த அவரது பேக் மற்றும் பர்சை சோதனை செய்தனர். அதில், அரியலுார் மாவட்டம் கல்லாத்துார் அடுத்த தண்டலை கிராமம் கதிர்வேல் மகன் வேல்முருகன், 39; என தெரிந்தது. அவர் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த இடத்தின் அருகே ஒரு பேனா கத்தியை போலீசார் கண்டெடுத்தனர். பின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வேல்முருகனிடம் விசாரித்தனர். அதில், அவருக்கு திருமணமாகி 7 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளது தெரிந்தது. இவர் கடந்த 2019ம் ஆண்டு கோவையில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்துள்ளார். அதன் மூலம், அந்த பகுதியில் இருந்த தனியார் வங்கியில் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் பெற்றுள்ளார்.கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடையை மூடி விட்டு, தற்போது பெங்களூருவில் ஸ்வீட் கடையில் பணி புரிகிறார். கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து விருத்தாசலம் வந்தார். பின், விருத்தாசலம் - ஆலடி சாலையில் நடந்து சென்று, குப்பை கிடங்கு எதிரே கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வேல்முருகன் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்


அறுவடை இயந்திரத்துக்கு வாடகை கேட்டவருக்கு அடி: 3 பேர் கைதுதிருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியைச் சேர்ந்தவர் சேகர் மகன் நடராஜன், 27; நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு விடுபவர்.டி.கே.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தமன் மகன் விஜய்அமிர்தராஜ், 30; இவர், நடராஜனிடம் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து நெல் அறுவடை செய்தார்.

அதற்கான 6,900 ரூபாயில் 3,000 ரூபாய் கொடுத்துள்ளார். மீதி தொகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.கடந்த 11ம் தேதி பணம் கொடுப்பதாக நடராஜனை வரவழைத்து, விஜய்அமிர்தராஜ் அவரது ஆதரவாளர்கள் விஜி, 38; ஆனந்த், 42; இளையராஜா, 45; பாஸ்கர், 58; ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்.படுகாயமடைந்த நடராஜன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிந்து, விஜய்அமிர்தராஜ், விஜி, பாஸ்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


பெண்ணாடத்தில் சிவில் இன்ஜி., கொலைபெண்ணாடம் : பெண்ணாடத்தில் சிவில் இன்ஜினியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 3 சிறுவர்கள் உட்பட 7 பேரை கைது செய்தனர். கடலுார் மாவட்டம், பெண்ணாடம், கருங்குழி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ஆனந்தபாபு, 32; கொத்தனார். கூடலுார் சேதுராமன் மகன் உதயராஜா, 28; பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்து, வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார். இவரிடம் ஆனந்தபாபு, பெ.பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த புனிதவள்ளி ஆகியோர் வேலை பார்த்தனர்.

புனிதவள்ளிக்கும், பெண்ணாடம் அடுத்த தொளார் இளங்கோவன் மகன் தர்மதுரை என்பவருக்கும் ரூ. 5000 பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. அந்த பணத்தை, நான் தருகிறேன் என தர்மதுரையிடம் ஆனந்தபாபு கூறினார். ஆனால் பணத்தை தரவில்லை. நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் தர்மதுரை, இவரது சகோதரர் ராஜதுரை மற்றும் தொளார் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் மகன் மணிமாறன், மாயவேல் மகன் பிரசாந்த், முருகன் மகன் சுகன், பழனிமுத்து மகன் அருள்குமார், தங்கவேல் மகன் சத்தியமூர்த்தி, பெண்ணாடம், சோழநகர் செல்லதுரை மகன் மணிகண்டன் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் ஆனந்த பாபுவிடம் பணம் கேட்டு தாக்கினர். அப்போது, ஆனந்தபாபு தனக்கும் தர்மதுரைக்கும் பணத் தகராறு உள்ளதாக உதயராஜாவிடம் மொபைலில் பேசி, பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்திற்கு ரூ. 5,000 எடுத்து வர கூறினார்.

அங்கு வந்த உதயராஜா, ஆனந்தபாபுவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தர்மதுரை மற்றும் ஆதரவாளர்கள் சேர்ந்து கட்டை மற்றும் கற்களால் உதயராஜா, ஆனந்தபாபு ஆகியோரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், உதயராஜா இறந்தார். படுகாயமடைந்த ஆனந்தபாபு சிகிச்சை பெற்று வருகிறார்.கொலை தொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், கடலுார் எஸ்.பி., சக்திகணேசன், விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் ஆகியோர் விசாரித்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தினர். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான தனிப்படை போலீசார், பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் கீழே பதுங்கியிருந்த சுகன், 26; அருள்குமார், 22; சத்தியமூர்த்தி, 24; மணிகண்டன், 22; மற்றும் 16, 17 வயதுடைய 3 சிறுவர்கள் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த தர்மதுரை, ராஜதுரை இருவரும் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள கோர்ட்டில் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிமாறன், பிரசாந்த் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரண்டாம் நாளான நேற்றும் பதட்டம் நிலவியதால் பெண்ணாடம், கூடலுார் பகுதியில் கடலுார், விழுப்புரம் மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


சென்னை பள்ளி மாணவி மதுரையில் தூக்கிட்டு தற்கொலை


அலங்காநல்லுார்:சென்னை திருவான்மியூர் டிராவல்ஸ் உரிமையாளர் செந்தில், கஜலட்சுமி தம்பதி. இவர்களது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் கண்டித்தனர். ஏப்.9 ல் ஸ்கூல் 'பேக்' உடன் புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. திருவான்மியூரில் புகார் அளிக்கப்பட்டது. ஏப்.10ல் திருச்சியிலிருந்து ஒரு பூக்காரரிடம் அலைபேசியை வாங்கி பெற்றோரிடம் பேசினார்.

மதுரை மாவட்டம் வாகைகுளம்- - குலமங்கலம் ரோடு பனங்காடி கண்மாய் அருகே ஜெயபாண்டி என்பவர் கட்டி வரும் வீட்டின் முதல் தளத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி இங்கு ஏன், எப்படி வந்தார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


விருந்தில் 'பீஸ்' கம்மி உருட்டுக்கட்டை அடிநாகப்பட்டினம்:விருந்தில், குறைவாக கறி பரிமாறப்பட்டதால் எழுந்த பிரச்னையில், விருந்து வைத்தவரை உருட்டு கட்டையால் தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsநாகை, காடம்பாடியைச் சேர்ந்தவர் சேகர், 35. நேற்று முன்தினம், சேகரின் சகோதரர் வீட்டில் நடந்த கறி விருந்திற்கு, நண்பர்களை அழைத்து இருந்தார். சேகரின் நண்பர்கள் ஜெய்சங்கர், 40; சுந்தரமூர்த்தி, 25, ஆகியோருக்கு குறைவாக கறி பரிமாறப்பட்டுள்ளது.

சேகரிடம் இது குறித்து கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரம் அடைந்த நண்பர்கள், அங்கு கிடந்த உருட்டு கட்டையால் சேகரை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த சேகர், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிப்பாளையம் போலீசார், ஜெய்சங்கர், சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.


'ரம்மி' தகராறில் கொலை; 10 பேரிடம் விசாரணைகுடியாத்தம்:'ஆன்லைனில்' ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் கொலையில், 10 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே, கூடல் நகரைச் சேர்ந்தவர் அசோகா, 33. கொரோனா தொற்றால் வேலையிழந்தார். இரண்டு ஆண்டுகளாக வேலை எதுவும் இல்லாத நிலையில், ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால், தினமும் குடித்து வந்தார். இதனால், அவரது மனைவி ரேவதி, 26, திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

அசோகா, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, அவரது வீட்டுக்கு பின்புறம் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். குடியாத்தத்தை சேர்ந்த சிலர் நடத்தி வந்த, ஆன்லைன் ரம்மி விளையாட்டில், 2 லட்சம் ரூபாய் வரை அசோகா இழந்துள்ளார்.

தனக்கு கொஞ்சம் பணத்தையாவது திருப்பி தரும்படி கேட்டபோது, அசோகாவுக்கும், 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தியவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.தங்களை பற்றி போலீசில் தெரிவித்து விடுவார் என பயந்த அவர்கள், அசோகாவை கடத்தி, ஒரு கோணிப்பையில் போட்டு, தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரிந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், குடியாத்தத்தைச் சேர்ந்த 10 பேரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பெண் வக்கீலுக்கு தொல்லை ஐ.டி., பொறியாளர் கைதுஜோலார்பேட்டை:ஓடும் ரயிலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஐ.டி., பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsசென்னை, மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த பெண் வக்கீல், கடந்த 9ம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடந்த நீதிபதி தேர்வுக்கு சென்றார். தேர்வு முடிந்து, 10ம் தேதி இரவு பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து, 'எஸ் - 11' பெட்டியில் பயணித்தார்.

அதே பெட்டியில் உடன் வந்த வாலிபர் ஒருவர், பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சக பயணியர் உதவியுடன் அவரை பிடித்து, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை என்பதால், அங்கு புகார் மாற்றப்பட்டது.

போலீசார் விசாரணையில், அந்த நபர் சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த கந்தன், 26, என்பதும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஐ.டி., பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. அவரை, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்து, திருப்பத்துார் கிளைச் சிறையில் அடைத்தனர்.


ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்சென்னை:துபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


latest tamil newsஐக்கிய அமீரக அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து சென்னைக்கு, இண்டிகோ மற்றும் எமிரேட்ஸ் விமானம் நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த இருவர், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றனர். அவர்களை நிறுத்தி, அவர்களது உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில், லேப்டாப் மற்றும் சார்ஜருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட, 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான 2.49 கிலோ எடையுள்ள, 43 தங்கத் துண்டுகளை பறிமுதல் செய்தனர். பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதே போல, கொழும்பில் இருந்து வந்த 12 பயணியரிடம், 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான 992 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு பயணி துபாயில் இருந்து சென்னை வந்தார். அவரை சோதனை செய்தபோது, அவரது ஆசனவாயில் இருந்து, 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 686 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பயணியை கைது செய்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மொத்தம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4.171 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை கமிஷனர் கே.ஆர்.உதய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


ரூ.35 லட்சம் மோசடி ஓசூர் பெண் கைது
latest tamil newsசெங்கல்பட்டு:தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி, போலி ரசீது வாயிலாக ஜி.எஸ்.டி., வரி கணக்கு காட்டியுள்ளார்.

புகார்படி அவரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 49; தனியார் சாப்ட்வேர் நிறுவன நிர்வாக மேலாளர். அதே நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி ஷைனி இவாஞ்சலின், 24, என்பவர் நிர்வாகச் செயலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிறுவனத்தின் 2019 -- 2021ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி., வரி 70 லட்சம் ரூபாய் செலுத்தும் பணியை ஷைனி இவாஞ்சலினிடம், மேலாளர் பன்னீர்செல்வம் ஒப்படைத்து உள்ளார்.ஆனால் அவர், 70 லட்சத்தில் 35 லட்சம் ரூபாய் மட்டும் ஜி.எஸ்.டி., வரி கட்டிவிட்டு, மீதி 35 லட்சம் ரூபாய்க்கு, போலியாக ஜி.எஸ்.டி., வரி கட்டியது போல் ரசீது தயார் செய்து, நிறுவனத்திடம் கணக்கு காட்டியுள்ளார்.

அவர், ஜி.எஸ்.டி., வரி முழுமையாக கட்டாமல் முறைகேடு செய்தது தெரிந்தது.இது குறித்து பன்னீர்செல்வம், செங்கல்பட்டு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.வழக்கு பதித்த இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார், ஓசூரில் இருந்த ஷைனி இவாஞ்சலினை கைது செய்தனர்.


மொபைல் கேம்' விபரீதம்: பள்ளி மாணவன் தற்கொலைபொள்ளாச்சி:கிணத்துக்கடவு அருகே, கேம் விளையாட மொபைல்போன் தராததால், சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.கிணத்துக்கடவு அருகே, கூலித்தொழிலாளியின், 12 வயது மகன், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், தந்தையின் மொபைல்போனை கேம் விளையாட கேட்டுள்ளார். மொபைல்போன் தராததால், வீட்டினுள் சென்று துாக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.அவரை மீட்ட உறவினர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் இறந்ததாக தெரிவித்தனர். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மொபைல்போன் விளையாட்டுகள் ஆபத்தானவை என, ஆசிரியர்கள், பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்,' என்றனர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஏப்-202208:23:46 IST Report Abuse
Lion Drsekar காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழமுடியும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரமும் மக்களிடத்தில் கிடைக்கும், தவறு செய்தவரை, செய்பவரை கண்டிக்கக்கூட உரிமையில்லாத நிலையில் இருக்கிறார்கள், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தாலே வக்கீல், கட்சி, சமூக அமைப்புகள், மத அமைப்புகள் என்று அடுக்கடுக்காய் வந்து மிரட்டி அழைத்து செல்லும் நிலையில் இருப்பதால் எதுவுமே செய்ய முடியாத நிலை, அப்படியே வெற்றிபெற்று நேர்மையாக பணியாற்றினால் நீதிமன்றத்தில் ஜெயிலுக்கு முன்னால் சட்டத்தின் ஓட்டையை வைத்து பெயில், அதையும் மீறி காவலர்களுக்கு செய்த பணிக்கு வெற்றி கிடைத்தால் சிறை அங்கு சென்றது பல சகாக்களுடன் கூட்டு சேர்ந்து பல கலைகளை மற்றும் சட்ட நுணுக்கங்களை கற்று தேர்ந்து பல கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள், இதுதான் இன்றைய நிலை, இப்படி ஒரு இடம் இல்லாமல் எல்லா இடங்களிலும் சீரழித்த அணைத்து புகழும் இந்த தவறானவர்கள் செயல்பாடுகளாலேயே, வந்தே மாதரம்
Rate this:
Cancel
13-ஏப்-202206:06:32 IST Report Abuse
ராஜா மத்திய அரசிடம் சொல்லி தமிழக பாஜக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X