வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்.14) காலை 10:30 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் நடக்கிறது. காலை 7:00 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அலைபேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருக்கல்யாணத்தை காண தெற்கு கோபுரம் வழியாக பக்தர்களுக்கு இலவச அனுமதி உண்டு. முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், அரசு அதிகாரிகள், ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். எந்தவொரு பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர வேண்டும். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் வடக்கு, மேற்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும். போலீஸ் சார்பில் முககவசம், குடிநீர் வழங்கப்படுகிறது.
எங்கெங்கு 'பார்க்கிங்'
திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள், மஞ்சள்நிற அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வாகனங்களை மேற்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். பிங்க் அட்டை வைத்திருப்பவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூல வீதியிலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் தெற்கு, வடக்கு மாசி வீதிகளிலும் நிறுத்த வேண்டும்.

ஏ.வி.பாலத்தில் யாருக்கு அனுமதி
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.16 காலை 5:50 மணிக்கு மேல் 6:20 மணிக்குள் நடக்கிறது. பச்சை நிற அனுமதி அட்டை உள்ளவர்கள் ஏ.வி.பாலத்திலும், பிங்க் நிற அட்டை உள்ளவர்கள் ஜி.எச்., எதிரே மினி பஸ் ஸ்டாண்டிலும், நீல நிற அட்டை உள்ளவர்கள் அண்ணா பஸ் ஸ்டாண்டிலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் கிழக்கு, வடக்கு மாசி வீதிகள், குருவிக்காரன் சாலை, சட்டக்கல்லுாரி ரோட்டிலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உதவி தேவைப்பட்டால் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை 83000 17920ல் தொடர்பு கொள்ளலாம். சித்திரை திருவிழா பாதுகாப்பில் 3500 போலீசார் ஈடுபடுகின்றனர்.
'மா மதுரை' செயலி அறிமுகம்
சித்திரை திருவிழா தகவல்கள் அடங்கிய 'மா மதுரை' செயலியை கலெக்டர் அனீஷ்சேகர், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அறிமுகம் செய்தனர்.
விழாவிற்கு வரும் மக்கள் தங்களின் வாகனங்களை எந்த பகுதியில் நிறுத்துவது, சுவாமி வரும் வழி, மருத்துவ சேவை, அவசர உதவி எண்கள், கோயில், முக்கிய இடங்களுக்கு செல்லும் வழித்தடம், விழா நிகழ்ச்சிகளின் கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை அறிய 'மாமதுரை' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.