வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.,வை எதிர்த்து களமிறங்க எதிர்க்கட்சிகள் இப்போதே ஆயத்தம் ஆகி வருகின்றன. காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் தலைவராவார் என கூறப்பட்டது. இதற்கு அப்போதே மறுப்பு தெரிவித்த சரத் பவார், ‛ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவோ அல்லது பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணியின் தலைவராகவோ விரும்பவில்லை' எனக்கூறினார்.

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் சரத் பவார் கூறியதாவது: மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பேச வேண்டிய நேரம் இது. ஆனால், யாரும் இதுகுறித்து பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது அணி அமைவது என்பது சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.