வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: பா.ஜ.,விற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‛தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது' எனத் தெரிவித்தார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை. நானும் திராவிடன்தான். திராவிடர்கள்தான் தமிழகத்தை ஆளமுடியும். திமுக, அதிமுக வில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்தான்.

தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம். ஆனால் திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது. பா.ஜ.,வினர் மண்ணை சார்ந்த தொழில் செய்கின்றோம். அதிமுக, திமுகவில் எவ்வளவு பேர் மண்சார்ந்த தொழில் செய்கின்றனர். துபாயில் , வெளிநாடுகளில் தான் தொழில் செய்கின்றனர். வரும் 2026ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ., பிடிக்கும். சட்டசபையில் தேவையில்லாத விவகாரங்களை பா.ஜ.,வினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது? பா.ஜ.,விற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.