வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை மேற்கு புறவழிச்சாலைப் பணிக்கு, ரூ.210 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது; முதல் பகுதியில், பெருமளவு நிலங்களுக்கான பத்திரப்பதிவு முடிந்திருப்பதால், அந்தப்பகுதியில் ரோடு அமைக்கும் பணி விரைவில் துவங்க வாய்ப்புள்ளது.
கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பாலக்காடு ரோட்டில் மைல்கல் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரோட்டில் கூடலுார் அருகே முடிவடையும் வகையில், 32.43 கி.மீ.. துாரத்துக்கு இந்த ரோடு அமைக்கப்படவுள்ளது.இதற்காக, 15 வருவாய் கிராமங்களில் அரசு நிலம் 57 ஏக்கர் உட்பட 361 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 313 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரோடு அமைப்பதற்கு 647 கோடி ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் பகுதியான மைல்கல்-சிறுவாணி ரோடு செல்லப்பம் பாளையம் வரையிலான 11.8 கி.மீ., துாரத்துக்கு 210 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, தமிழக பட்ஜெட் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பகுதியில், மதுக்கரை, சுண்டக்காமுத்துார், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம் மற்றும் மாதம்பட்டி ஆகிய ஐந்து வருவாய் கிராமங்களில், 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதில் 20 ஏக்கர், அரசு நிலமாகும்; மீதமுள்ள 117 ஏக்கரில், 70 ஏக்கர் வரையிலான நிலத்துக்கு பத்திரப்பதிவு முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 47 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்தப் பணியும் விரைவாக நடந்து வருவதால், ஒரு மாதத்துக்குள் முதல் பகுதியில் ரோடு அமைப்பதற்குத் தேவையான நிலம் முழுவதுமாக கையகப்படுத்தப்படும் என்று, வருவாய்த்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இரண்டாம் பகுதியில், செல்லப்பம்பாளையத்திலிருந்து ஆனைகட்டி ரோடு கணுவாய் வரை 12.1 கி.மீ., துாரம் ரோடு அமைக்க, 240 கோடி ரூபாயும், மூன்றாம் பகுதியில், கணுவாயிலிருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயக்கன் பாளையம் வரை 8.52 கி.மீ., ரோடு அமைக்க 200 கோடி ரூபாயும் நிதி தேவைப்படுகிறது. முதல் பகுதிக்கு மட்டுமே இப்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாக ஒப்புதலும், தொழில்நுட்ப ஒப்புதலும் பெற்றபின், டெண்டர் விடப்படுமென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால், ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில், முதல் பகுதி ரோடு அமைக்கும் பணி துவங்குவதற்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பகுதியில், பேரூர், மேற்கு சித்திரைச் சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய வருவாய் கிராமங்களில், 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்தப் பணியை விரைவுபடுத்தும் வகையில், அதற்கென தனி தாசில்தார் நியமிக்கப்பட்டு இருப்பதால், முதல் பகுதியிலேயே மருதமலை வரையிலும் ரோட்டை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எப்படியும் இந்த ஆண்டுக்குள் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கிவிடுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நிலமும் நிதியும்!
முதல் பகுதியில், 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.176 கோடியும், இரண்டாம் பகுதியில், 92.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.111 கோடியும், மூன்றாம் பகுதியில் 83 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.96 கோடியும் என மொத்தம் ரூ.376 கோடி நிதி தேவைப்படுகிறது. இதில் 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 313 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நிலங்களைக் கையகப்படுத்தவே, இன்னும் 56 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. தேவைப்படும்போது அந்த நிதி, அரசிடமிருந்து பெறப்படுமென்று வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.
-நமது நிருபர்-