தமிழக காங்., முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் பேட்டி: முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும், அதையும் மீறி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்கிறார். குறிப்பாக, மகளிருக்கு அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம், பள்ளி மாணவியருக்கு உதவி தொகையை சொல்லலாம். தமிழக பட்ஜெட்டை பொறுத்தமட்டில், 'சட்டியில் இருந்தால் தானே அகப்பை'க்கு வரும் என்ற நிலை தான். சொத்து வரியை உயர்த்தினால் தான் நகர்ப்புற, ஊராட்சி மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அரசு கூறியதால் தான், தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
தி.மு.க.,வினர் கூட, அரசுக்கு வக்காலத்து வாங்கி இப்படி பேசியது இல்லை. உங்கள் பேச்சை பார்த்தால், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு அடிபோடுறீங்களோ என்ற எண்ணம் தான் தோணுது!
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் முத்தரசன்: சொத்து வரியை குறைப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி முடிவெடுக்க வேண்டும். பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதால், 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். 'டாஸ்மாக்' கடைகளை, படிப்படியாக குறைக்க வேண்டும். மது இல்லாத தமிழகமாக மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீங்க சொன்ன எதையுமே முதல்வர் செய்யப் போறதில்லை. அது, உங்களுக்கும் நல்லாவே தெரியும். ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றவே இப்படி கோரிக்கைகளை அடுக்குறீங்க என்பது பளிச்சுன்னு தெரியுது
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே, 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர், அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார்.ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை, நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கப் போகிறோம். இது, வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுக்கும். எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்.

உங்க கருத்து சரிதான். ஆனா, இந்த சட்டத்தை இயற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என்பது தான் புரியவில்லை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா: கொங்கு மண்டல மக்கள், பாசமாக என்னை வரவேற்றனர். எனக்கு கட்சியினர், மக்கள் இடையே ஆதரவு உள்ளது.அ.தி.மு.க.,வில் இருந்து என்னை நீக்கியது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தாலும் ஒன்றும் நடக்காது என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். தனி ஒருவர் கருத்து எடுபடாது. தொண்டர்கள் தான் முடிவு செய்வர். வரும் லோக்சபா தேர்தலில் மாற்றம் வரும்.
கட்சியினர் ஆதரவு இருந்திருந்தால், இந்நேரம் உங்களை சுத்தி லட்சோப லட்சம் தொண்டர்கள் வந்திருக்கணுமே. அப்படி யாரையும் காணோமே!