சென்னையில், கல்லுாரி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல்கள், நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மாநகர பஸ், புறநகர் ரயில்களில் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதால், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். கையில் பேனா பிடிக்கும் வயதில், அரிவாள், பட்டா கத்தி ஏந்தும் மாணவர்களை திருந்தி வாழ செய்யும் நடவடிக்கையில், போலீசார் களம் இறங்கியுள்ளனர். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது, கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
சென்னையில், பஸ், ரயில்களில் பயணிக்கும் கல்லுாரி மாணவர்கள், 'சீனியர், ஜூனியர்' என்ற 'ஈகோ' மற்றும் ரூட் தல' என்ற பிரச்னையில் மோதி கொள்வது அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஆவடி மின்சார ரயிலில், படிக்கட்டில் பயணித்த கல்லுாரி மாணவர்கள், நடைபாதையில் கத்தியை உரசியபடி, தீப்பொறி பறக்க விட்ட சம்பவம், பொதுமக்களை பதற்றம் அடைய செய்தது.
அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில், பச்சையப்பன் கல்லுாரி, மாநில கல்லுாரி மாணவர்கள் பயணித்தனர். பேசின் பாலம் அருகே ரயில் வந்தபோது, இரு கல்லுாரி மாணவர்களும் மோதிக்கொண்டனர்.பெரம்பூர் வந்ததும், அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்திய மாணவர்கள், ஒருவர் மீது ஒருவர் ஜல்லி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது, சக பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே போலீசார், 15 பேரை பிடித்து, அவர்களின் பெற்றோரை வரவழைத்து, 'இனி இந்த தவறை செய்ய மாட்டோம்' என, எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர்.
அதே போல், அத்திப்பட்டு ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி, மாநில கல்லுாரி மாணவர்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை பிடித்த ரயில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, கல்லுாரி நிர்வாகத்திற்கும் தகவல் கூறினர். பிடிப்பட்ட அனைவரும் கல்லுாரி மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கட்டாயம் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.
மாணவர்களின் எதிர்காலம் கருதியும், ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்திலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதன் படி, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரிகளில் மாணவர்களை அமர வைத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை மாநில கல்லுாரியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துணை கமிஷனர் பகலவன், திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர், மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாநில கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போலீசார் கூறியதாவது:பஸ், ரயில்களின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்து, விபத்தில் கை-, கால்களை இழந்தால், உங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். மாணவர்கள் மோதிக்கொள்வதால் வழக்கு வந்து சேரும்; சிறை சென்றால் படிப்பு வீணாகி எதிர்காலத்தை பாதிக்கும்.மாணவர்கள் மத்தியில் 'ஈகோ' அதிகரித்துள்ளது.பஸ், ரயிலில் படிக்கட்டில் ஏறும்போதும், இறங்கும் போதும், 'விட்டுக்கொடு, விலகிவிடு' என இருந்தால், எந்த பிரச்சினையும் வராது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சட்டப்படி நடவடிக்கை!
சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில்களில், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ரயில்வே போதுகாப்பு படை, ரயில்வே போலீசாரால், காலை, மாலை வேளைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில்களில் ஒவ்வொரு ரயிலிலும், ரயில்வே பாதுகாப்பு படையினர் இருவர் சென்று வரவும், நிலையத்தில் ஒருவர் சாதாரண உடையில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரயில்வே போலீசார், உள்ளூர் போலீசார், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒருங்கிணைந்து செயல்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ரயில்கள் மற்றும் நிலையங்களில் தகராறில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை பாயும்.-
செந்தில் குமரேசன்,
முதன்னை கமிஷனர்,
சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை
விழிப்புணர்வு பாடம்!

கல்லுாரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம், தேவையற்ற தகாறில் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்கும் வகையில், நேற்று பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களுக்கு, போலீசார் மற்றும் கல்லுாரி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் பங்கேற்று, மாணவர்களிடம், சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும், அதில் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தினார்.அதேபோல், தேவையில்லாமல், அடிதடி, கலாட்டா உள்ளிட்ட குற்றச்செயலகளில் ஈடுபட கூடாது என்றும், பஸ்களில் சாகசங்கம் என்ற பெயரில் ஆபத்தான பயணம் மேற்கொள்ள கூடாது எனவும் எச்சரித்தார். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.
கல்லுாரி மாணவர்கள் கைது!

சென்னையில் இருந்து சென்ற மின்சார ரயிலில், நேற்று முன்தினம் மாநில கல்லுாரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் இடையில் ரயில் வரும்போது, மாணவர்கள் பயணம் செய்த பெட்டியில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். பதிலுக்கு மாநில கல்லுாரி மாணவர்களும் தாக்க ஆரம்பித்தனர்.இது தொடர்பாக மீஞ்சூர் ரயில் நிலைய மேலாளர் நரசிம்மன் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர். -
நமது நிருபர் குழு -