வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: அரசியலில் குதிக்க வேண்டும்; தமிழக அரியணையில் ஏற வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறார் நடிகர் விஜய். ஆனால், அவரது ரசிகர்கள் , பீஸ்ட் படம் பார்க்க போன பல தியேட்டர்களில் திரையை எரிப்பதும், சேர், கண்ணாடிகளை உடைப்பதும், ரோட்டில் வாகனங்களை மறிப்பதும் என்று ரகளை செய்து வருகின்றனர். எந்த கட்டுப்பாடும் இல்லாத ரசிகர் கூட்டத்தை வளர்த்து விட்டுள்ள விஜய் மீது பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது அவரது அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
விஜய், பூஜாஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டரில் ரகளையில் ஈடுபடுகின்றனர். தியேட்டர் திரையை கிழிப்பதும், எரிப்பதுமாக இருந்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே வடுகநாதன் திரையரங்கில், மயிலாடுதுறை மற்றும் நெய்வேலியைச் சேர்ந்த நான்கு ரசிகர்கள் 'ஆன்லைன்' மூலம் டிக்கெட் பதிந்து நேற்று பீஸ்ட் படம் பார்க்க சென்றுள்ளனர்.
போதையில் தகராறு
இருவர் மது அருந்தியிருந்ததால், திரைஅரங்க ஊழியர் அனுமதி மறுத்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, 2,000 ரூபாய் கட்டணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளனர். 'ஆன்லைன் டிக்கெட்டுக்கு நாங்கள் பணம் திருப்பி தர முடியாது' என, திரைஅரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த விஜய் ரசிகர் ஒருவர், திரையரங்க ஊழியர் ரஞ்சித்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். சிதம்பரம் நகர போலீசார் வந்ததும், போதையில் இருந்த விஜய் ரசிகர்கள் தப்பி ஓடினர். திரையரங்க ஊழியர் ரஞ்சித்குமார் கொடுத்த புகாரில், அடையாளம் தெரியாத நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சென்ற விஜய் ரசிகர்கள், சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி ரகளை செய்தனர்.

அரசியல் ஆசையில் உள்ள விஜய், ரஜினி பாணியில், படங்களில் வசனம் வாயிலாக, தன் ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். நிஜத்தில் தன் ரசிகர்களை கட்டுப்படுத்த தவறினால், மக்கள் மத்தியில் விஜய் தன் செல்வாக்கை இழக்க நேரிடலாம்.

போலீசில் புகார்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், நடிகர் விஜயின் 'பீஸ்ட்' படத்திற்கு தடை கோரி போலீசில் முஸ்லிம்கள் புகார் அளித்துள்ளனர். அதில், 'பீஸ்ட் படத்தில், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கின்றனர். சில காட்சிகள் முஸ்லிம்கள் மனதை துன்புறுத்தும் விதத்தில் உள்ளன. எனவே, படத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.