பிரதமர் மோடிக்கு எப்போதுமே தமிழகம் மீதும், தமிழ் மீதும் தனி பாசம் உண்டு. அவர் செங்கோட்டையில் கொடி ஏற்றினாலும், பார்லிமென்டில் பேசினாலும், தமிழின் பெருமைகளை சொல்லாமல் இருக்கமாட்டார். தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தி வரும் மோடி, இப்போது ஒரு புதிய முடிவு எடுத்துள்ளாராம்.
அவர் தமிழகத்திலிருந்து இரண்டு பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கப் போகிறார். தமிழக சட்டசபையில் பா.ஜ.,விற்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள நிலையில், இதற்கு ஒரு ஸ்பெஷல் திட்டம் வைத்துள்ளார் மோடி. ராஜ்யசபா தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, குறைந்தது 35 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை என்றாலும், ஜனாதிபதி 12 பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கலாம் என்கிறது சட்டம். விளையாட்டு, சமூக சேவை என பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இப்படி எம்.பி.,யாக நியமிக்க முடியும். சச்சின் டெண்டுல்கர் உட்பட பலர் இப்படித்தான் ஜனாதிபதி நியமனம் வாயிலாக எம்.பி.,யானார்கள்.
இந்த வழியைப் பின்பற்றி இரண்டு தமிழர்களை எம்.பி.,யாக்க மோடி திட்டமிட்டுள்ளார். யார் அந்த இருவர் என, பா.ஜ., வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், மோடிக்கும், அமித் ஷாவிற்கு மட்டுமே அந்த இருவரின் பெயர் தெரியுமாம்.