என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் வகையில், 2010ல் வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்கு முறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில், 2020ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதன்படி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பதிவு செய்யும் போது, அவற்றின் உறுப்பினர்களது ஆதார் எண்களை அளிப்பது உட்பட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் நிறுவனங்கள், அந்த நிதியை முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும், உறுப்பினர்களே இல்லாமல், போலி பெயரில் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதை தவிர்க்கவுமே, இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சில தொண்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. மத்திய அரசு அமல்படுத்திய திருத்தங்கள், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என்றும் வாதிட்டன.
விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் பல தொண்டு நிறுவனங்கள், அவற்றை அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்கு பயன்படுத்தாமல், வேறு முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தியதாக, ஏராளமான புகார்கள் வந்துள்ளன. 'அதனடிப்படையில், விதிமுறைகளை பின்பற்றாத, 19 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களின் முந்தைய கால செயல்பாடுகளை பார்க்கும் போது, அவற்றை ஒழுங்குபடுத்துவது அவசியமாகிறது. எனவே, மத்திய அரசு அமல்படுத்திய சட்டத் திருத்தங்கள் செல்லத்தக்கதே' என்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தொண்டு நிறுவனங்கள், நிதி பெறுவது மற்றும் அதைச் செலவிடும் விஷயத்தில், மத்திய அரசு அமல்படுத்திய சட்ட விதிமுறைகள் அமலுக்கு வரும். வெளிநாட்டு நிதி பெறுவது என்பது, தொண்டு நிறுவனங்களின் தனிப்பட்ட அல்லது தார்மீக ரீதியான உரிமை அல்ல. அன்னிய நாட்டு நிதியின் புழக்கம், உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அது நாட்டின் அரசியலில் மட்டுமின்றி, சமூக பொருளாதார கட்டமைப்பிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், 'அன்னிய நாட்டு நிதி பெறுவதிலும், அவற்றை பயன்படுத்துவதிலும், பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் கருத்தும் நீதிபதிகளால் ஏற்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது, 2010 - 2019 வரையிலான ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள், அதற்கான முறையான கணக்குகளை பராமரிக்காததோடு, ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய வரவு, செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்காமல் ஏமாற்றி வந்தன. அதனால் தான், ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்கு முறைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக, கிட்டத்தட்ட 23 ஆயிரம் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. புதிய சட்ட விதிகள் தற்போது அமலுக்கு வந்துள்ளதால், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மட்டுமின்றி, இறையாண்மையும், பொதுமக்களின் நலனும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட, 32 லட்சம் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, நகர்ப்புறங்களில், 1,000 பேருக்கு நான்கு தொண்டு நிறுவனங்களும், கிராமப்புறங்களில் 1,000 பேருக்கு, ௨.௩ தொண்டு நிறுவனங்களும் உள்ளன.
நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட, இரு மடங்கு அதிகமாகவும், அரசு மருத்துவமனைகள் எண்ணிக்கையை விட, 250 மடங்கு அதிகமாகவும் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வெளிநாட்டு நிதி பெறுவதில் முழுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுக்கு ஏற்றது.
இல்லையெனில், அது பல வகையிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. அதனால், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை அங்கீகரித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கதே. இனிமேலாவது, தொண்டு நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட முன்வர வேண்டும். அதுவே, நாட்டிற்கு நல்லது.