மூணு கட்சி கவுன்சிலர்களும் கூட்டு... சொந்தக்கட்சிக்கு வைக்கிறாங்க வேட்டு!| Dinamalar

மூணு கட்சி கவுன்சிலர்களும் கூட்டு... சொந்தக்கட்சிக்கு வைக்கிறாங்க வேட்டு!

Updated : ஏப் 23, 2022 | Added : ஏப் 19, 2022 | |
வாலாங்குளத்தில் 'வாக்கிங்' போகலாம் என்று அழைத்த மித்ரா, சித்ராவுக்காக பாலத்துக்கு அருகில் காத்திருந்தாள். சித்ரா வந்ததும், இருவரும் சுங்கத்தை நோக்கி, இடதுபுறமாக நடைமேடையில் நடக்க ஆரம்பித்தனர். முதலில் சித்ராதான் ஆரம்பித்தாள்...''மித்து...இன்னும் கொஞ்ச நாள்ல வாலாங்குளமே வேற 'லெவல்'க்கு மாறிடும் போலிருக்கே. இந்தப் பக்கம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல
 மூணு கட்சி கவுன்சிலர்களும் கூட்டு... சொந்தக்கட்சிக்கு  வைக்கிறாங்க  வேட்டு!

வாலாங்குளத்தில் 'வாக்கிங்' போகலாம் என்று அழைத்த மித்ரா, சித்ராவுக்காக பாலத்துக்கு அருகில் காத்திருந்தாள். சித்ரா வந்ததும், இருவரும் சுங்கத்தை நோக்கி, இடதுபுறமாக நடைமேடையில் நடக்க ஆரம்பித்தனர். முதலில் சித்ராதான் ஆரம்பித்தாள்...''மித்து...இன்னும் கொஞ்ச நாள்ல வாலாங்குளமே வேற 'லெவல்'க்கு மாறிடும் போலிருக்கே. இந்தப் பக்கம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல கார்ப்பரேஷன் என்னென்னமோ பண்றாங்க.
எதிர்ப்பக்கமா, ஹைவேஸ்காரங்க ரோட்டை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டி, 'பிளாட்பார்ம்' போடப்போறாங்களாம். நம்மூர் மக்களுக்கு இன்னொரு 'வாக்கிங் ஏரியா' கிடைக்கப்போகுது!''''எல்லாம் சரிதான்க்கா...வர்ற வண்டிகளை நிறுத்துறதுக்கு எங்க 'பார்க்கிங்' வைக்கப் போறாங்கன்னே தெரியலையே...எந்தப் பக்கம் 'பார்க்கிங்' வச்சாலும், பாதுகாப்பா மக்கள் ரோட்டைக் கடந்து போறது சாதாரண விஷயமில்லை.
டூரிஸ்ட் மினிஸ்டர், மேயர், மண்டலத் தலைவர் எல்லாரும் மாறிமாறி வந்து ஆய்வு பண்றாங்க. ஆனா 'பார்க்கிங்' பத்தி யாருமே கவலைப்படுறதாவே தெரியலை!'' என்றாள் மித்ரா.''இங்க மட்டுமா...ரேஸ்கோர்ஸ்ல என்ன வாழுது...அங்கயும் 'ஸ்மார்ட் சிட்டி'யில 45 கோடி ரூபாய் செலவு பண்ணி, 'மாடல் ரோடு'ன்னு ஏரியாவையே உருக்குலைச்சு வச்சிருக்காங்க. ஆனா அங்க வர்ற வண்டிகளை நிறுத்தவும் ஒரு 'பார்க்கிங்' ஏரியாவை ரெடி பண்ண மாட்டேங்கிறாங்களே....!'' என்று சித்ரா முடிப்பதற்குள், குறுக்கிட்டுப் பேசினாள் மித்ரா... நிர்மலா காலேஜ்க்குப் பின்னாடி, ரோட்டோரக் கடைகளை எடுக்குறதுக்குப் போராடுன இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருத்தர் மேல, மாமூல் கேட்டு மிரட்டுனார்னு வியாபாரிகள் அமைப்புல இருந்து போலீஸ்ல புகார் கொடுத்தாங்க...ஞாபகமிருக்கா... அவரோட உயிருக்கு ஆபத்துன்னு இப்போ போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்காங்க!''''அது பழைய மேட்டர்...இப்போ போலீஸ் பாதுகாப்பு வந்த பிறகு, ராமநாதபுரம், சிங்காநல்லுார் ஏரியாவுல இருக்குற 'பார்'கள்ல எல்லாம் வசூல் வேட்டையில இறங்கீட்டாராம்.

ராத்திரியில சரக்கு வித்தா அவருக்கு தனியா கமிஷன் கொடுக்கணும்; இல்லேன்னா போலீஸ்ல போட்டுக் கொடுத்துருவேன்னு தீயா வசூல் பண்றாராம்!''''டாஸ்மாக் வசூல்ன்னதும் ஞாபகம் வந்துச்சு...இப்போ நம்ம ஊர்ல இருக்குற டாஸ்மாக் ஆபீசரைப் பத்திதான், கடை ஊழியர்கள் அத்தனை பேரும் புலம்பித் தீர்க்குறாங்க...கட்சி மேலிடத்துல பயங்கர செல்வாக்கா இருக்காராம். அதனால, கடைக்குக் கடை விதவிதமா வசூல் பண்றாராம்!''''வடக்கு மாவட்டத்துல இருக்குற 161 கடைகள்லயும் சேல்ஸ்க்குத் தகுந்த மாதிரி, எட்டாயிரம், பத்தாயிரம்னு அவருக்கு மாசாமாசம் மாமூல் போயிட்டுதானே இருக்கு...'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா. அதற்கு பலமாகத் தலையாட்டிய சித்ரா, மறுபடியும் விளக்கம் சொல்லத் துவங்கினாள்...''அது போன மாசம் மித்து....இப்போ புதுசா ஒரு உத்தரவு போட்ருக்காராம்.

அதாவது ஒவ்வொரு கடையிலயும் சேல்ஸ் ஆகுற பாட்டிலுக்கு 50 பைசா அவருக்குக் கொடுத்துரணுமாம். ஒரு கடையில ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் பாட்டில் வித்தா, அவருக்கு 1000 ரூபாய் போயிரணும். இப்பிடி விக்கிற கடைங்க நிறைய இருக்கு. அதனால ஒரு கடையிலயே மாசம் 30லயிருந்து 40 ஆயிரம் வரைக்கும் கிடைச்சிரும்!''''அடேங்கப்பா...இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியால்ல இருக்கு...துறை அமைச்சரே பொறுப்பாளரா இருக்குற மாவட்டம்கிறதால, அவர் பேரைச் சொல்லித்தான், இவர் வசூல் பண்றாருன்னு சொன்னாங்க. ஆனா...வசூல்ல அவரை விட இவர்தான் புலின்னு டாஸ்மாக் ஊழியர்கள் சொல்றது நிஜம்தான் போலிருக்கு!''மித்ரா சொல்லி முடித்து விட்டு அமைதியாக நடந்தாள்.

சாலையோரத்தில் பா.ஜ., கொடி கட்டி நின்ற வண்டியைப் பார்த்ததும் சித்ரா ஆரம்பித்தாள்...''மித்து! பி.ஜே.பி., மாநிலத் தலைவர் அண்ணாமலை, பீளமேடு பக்கத்துல இருக்குற ரேஷன் கடையில புகுந்து, பிரதமர் மோடி படத்தை மாட்டுன விவகாரத்துல, நம்ம ஊர்ல இருக்குற ஆபீசர்கள் எல்லாருக்கும் ஏகப்பட்ட தர்ம சங்கடமாயிருச்சாம். இதுக்கு முன்னாடி, ஆலாந்துறை பேரூராட்சியில பிரதமர் படத்தை வச்சது மாதிரிதான் இந்த சம்பவமும்!''''அதுல ஒருத்தரை அரெஸ்ட் பண்ணாங்களே!''''அவரு சாதாரண ஆளு...இங்க படம் வச்சது மாநிலத் தலைவர், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியாச்சே... அதனால யாரும் புகார் கொடுக்கத் தயாரா இல்லை. இந்த வெவகாரமே வேண்டாம்னு, மாவட்ட நிர்வாகம், போலீஸ் ரெண்டு தரப்புலயும் 'எஸ்கேப்' ஆயிட்டாங்க.
ஆனா சம்பவம் நடந்தவுடனே ஏன் தகவல் சொல்லலைன்னு சிங்காநல்லுார் ஸ்டேஷன் உளவுப் பிரிவு ஏட்டுக்கு, மெமோ கொடுத்துட்டாங்க!''''இப்பிடியே ஒவ்வொரு கடையிலயும் வைக்க ஆரம்பிச்சா, இவுங்களுக்குப் பெரிய தலைவலி ஆயிருமே...!''''அந்த பயம்தான் எல்லாருக்கும் இருக்கு...போலீஸ்ல ஒரு பாசிட்டிவ் நியூசும் இருக்கு...கஞ்சா வேட்டை 2.0 ங்கிற பேர்ல, மாநிலம் முழுக்க நடந்த கைது நடவடிக்கையில, காலேஜ்கள் நிறைய இருக்குற நம்ம சிட்டியிலயும் ஏகப்பட்ட பேரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. இனிமே ஆந்திராவுல இருந்து ரயில்ல வர்ற கஞ்சாவைத் தடுத்தாப் போதும்னு, போலீஸ் ஆபீசர்களே பெருமையா சொல்லிட்டு இருக்காங்க!''''அதெல்லாம் நல்ல விஷயம்தான்க்கா... காலேஜ் நிர்வாகங்கள் 'ஸ்ட்ரிக்ட்டா ஆக்சன்' எடுத்தாலே கஞ்சாவைத் தடுத்துரலாம்னு ஒரு போலீஸ் ஆபீசர் சொல்றாரு....ஆனா ஒரு சில காலேஜ்கள்ல சுத்தமா ஒத்துழைப்பே தர்றதில்லையாம்.
சில காலேஜ் பசங்க கைச்செலவுக்கு கஞ்சா வித்ததையெல்லாம், போலீஸ் விசாரணையில கண்டுபிடிச்சிருக்காங்க!''''மித்து! நம்மூரு ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல சர்ட்டிபிகேட் கொடுக்குறதுக்கு லஞ்ச ரேட்டை தாறுமாறா ஏத்திட்டாங்களாம். பீளமேடு ஆர்.டி.ஓ.,ஆபீசுக்கு எதிர்ல சவுரிபாளையம் மணியகாரர் ஆபீஸ் இருக்கு. அங்க இருக்குற ரெண்டு தண்டக்காரர்கள்தான் இந்த வசூல்லயே டாப்ன்னு சொல்றாங்க...அங்க சொத்துரிமைச் சான்றுக்கு 20 ஆயிரம், வாரிசு சான்றுக்கு 10 ஆயிரம்னு துட்டு வாங்குறாங்களாம்!''''அய்யோ... தலை சுத்துது...விஜிலென்ஸ்க்கு இதுவரைக்கும் புகாரே போகலையா?''''அது தெரியலை...ஆனா ஒருத்தர் சர்ட்டிபிகேட் கொடுக்குறது, இன்னொருத்தர் வசூல் பண்றதுன்னு வேலையை பிரிச்சு செய்யுறாங்களாம்.
இறந்து பல வருஷமாகி, கோர்ட்ல உத்தரவு வாங்குற கேசுக்கு எல்லாம் இவுங்களே தாராளமா சர்ட்டிபிகேட் கொடுத்துர்றாங்களாம். வருமானம் வேற லெவல்ன்னு பேசிக்கிறாங்க!''இதைச் சொல்லி முடித்த சித்ரா, ''பாலிடிக்ஸ் மேட்டர் ஒண்ணுமில்லையா மித்து?'' என்று ஆர்வமாய்க் கேட்க, ''ஒரு செம்ம மேட்டர் கேள்விப்பட்டேன்க்கா...!'' என்று அதை விளக்க ஆரம்பித்தாள்...''குனியமுத்துார் ஏரியாவுல அடுத்தடுத்து இருக்குற மூணு வார்டுல தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., மூணு கட்சியோட கவுன்சிலர்கள் இருக்காங்க. இவுங்க மூணு பேரும் ரொம்ப க்ளோஸ் பிரண்ட்சாம். போன வாரம் மூணு பேரும் சேர்ந்து சரக்கு அடிக்கிறப்போ, அந்த எதிர்க்கட்சி கவுன்சிலர், 'நீங்கள்லாம் அண்ணன்ட்ட நல்லா வாங்கித்தின்னுட்டு அவருக்கு துரோகம் பண்ணீட்டிங்க'ன்னு சொல்லிருக்காரு!''''யாராம் அந்த அண்ணன்?''''அந்த ஏரியாவுல அண்ணன்னா அவரு மட்டும்தான்...உடனே அந்த கதர்ச்சட்டை கவுன்சிலரு, 'நான் எங்கடா அவர்ட்ட வாங்குனேன்'னு எகிற, மூணு பேருக்குள்ள அடிதடியே ஆயிருக்கு.

இந்த கூத்துல, ஆளும்கட்சியோட அந்த ஏரியா நிர்வாகி ஒருத்தரும் இருந்திருக்காரு. அவரை இப்பவும் 'மாஜி'யோட 'ஸ்லீப்பர் செல்'லுன்னு சொல்லுவாங்க. அவர்தான் சண்டையை சமாதானப்படுத்திருக்காரு!''''ஓ அவரா...அவுங்கள்ட்ட பேசுறதுக்கு மட்டும் ஒரு நம்பர் வச்சிருக்காருன்னு சொல்லுவாங்களே...அந்த மேட்டர்தான் லோகத்துக்கே தெரியுமே...அவர்தான் இப்போ அந்த 'மாவட்டத்துக்கு' வசூல் ஏஜென்டா இருக்காராமே...அந்த ஏரியா 'பார்'களை எல்லாம் எடுத்துட்டாராம். வேலைக்கே போகாம, வாடகை வீட்டுல இருக்கிறவரு, பையனுக்கு ரெண்டரை லட்ச ரூபாயில புது புல்லட் வாங்கிருக்காராம். அப்போ வசூல் எப்பிடி இருக்குன்னு பாரு!''மித்ரா சொல்லும்போதே, லேசாக மழை துாற ஆரம்பிக்க, இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு ஓட்டமெடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X