வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மயிலாடுதுறையில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கறுப்புக்கொடி வீசிய சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கவர்னரின் பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். மன்னம்பந்தல் வழியாக தர்மபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மணபந்தல் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் , ஜனாதிபதிக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை கடந்து கவர்னர் சென்று விட்ட நிலையில், பாதுகாப்புக்காக சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தனர்.
போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தடுப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: இன்று மயிலாடுதுறையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டது. அவரது கான்வாய் மீது திமுக ஆதரவாளர்கள் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசினர். நமது முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒருவரை கண்மூடித்தனமாக வெறுக்கிறார். அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது. கவர்னருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.