ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுள்ளவர்களுக்கு நடந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் குவிந்தனர். மாடுகளை அவிழ்த்து கட்டி, தீவனம் போட்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருந்தகங்களில் காலியாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்காக 2232 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில், ரூ.19,500 சம்பளத்தில் 6 பெண்கள், 12 ஆண்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல், மாடுகளை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதற்கான செயல்விளக்க சோதனை, சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட தேர்வு நடத்தப்பட்டன.
நேர்காணலுக்கு 4 மதிப்பெண்கள், கால்நடைகளை கையாளும் விதத்திற்கு 2, சைக்கிள் ஓட்டுவதற்கு 2, டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் 1, கால்நடை பயிற்சி பெற்றிருந்தால் 1 என பத்து மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடந்தது.
முதல் நாளில் 750 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் காலை 7:30 முதல் விளையாட்டு அரங்கில் வரிசையில் காத்திருந்தனர். இவர்களில் 200க்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளும், இளநிலை, முதுகலை பட்டதாரிகளும் பங்கேற்றனர்.
மரத்தில் கட்டிப்போட்டிருந்த மாடுகளை கட்டவிழ்த்து சிறிது துாரம் அழைத்து சென்று மீண்டும் மரத்தில் கட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE