சென்னை: இரண்டு திருமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி' போடும் வகையில் அதிரடி உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறி, இரு திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன், அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள், பணியில் இருந்தாலும், விடுப்பில் இருந்தாலும், அயல் பணியில் இருந்தாலும், அரசு பணியாளர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்கள். இந்திய தண்டனை சட்டப் பிரிவின்படி, கணவர் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் மற்றொரு திருமணம் செய்து கொண்டால், அவர்கள் தண்டனைக்கு உட்பட்டவர்கள்.
எனவே, 1973ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின், 19ம் பிரிவின்படி, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது, எந்தவொரு அரசு பணியாளரும், மற்றொரு திருமணம் புரியவோ அல்லது வேறு விதமான திருமண பந்தத்திலோ ஈடுபடக் கூடாது. இந்த விதிகளை மீறிய எந்த செயலும், குடிமைப் பணிகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.
அரசு பணியாளர்கள் ஓராண்டு பணி நிறைவடைந்ததும், தங்கள் குடும்ப விபரங்களை, படிவம் மூன்றில் அளிக்க வேண்டும். நடத்தை விதிகளின்படி, அரசு பணியாளர் எவரும், அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தக் கூடிய, சட்டத்துக்கு புறம்பான ஒழுக்கக்கேடான எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது.
பெரும்பாலும் அரசு பணியாளரின் ஓய்வு அல்லது இறப்புக்கு பின்னரே, இரு மணம் குறித்த தகவல், அலுவலகத் தலைமைக்கு தெரிய வருகிறது. இது, அரசு பணியாளரின் சட்டப்படியான வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியப் பயன்களை அளிப்பதில் இடையூறுகளை, இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழக அரசு சார்பில் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
* துறை அதிகாரிகள், அரசு பணியாளரின் குடும்ப விபரங்களை, படிவம் மூன்றில் பெறுவதுடன், முறையான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்த பின், அதன் விபரங்களை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்
* அரசு பணியாளர்கள் பணியில் சேரும்போது அல்லது திருமணத்திற்கு பின் வழங்கும், 'நாமினேஷன்' தொடர்பான வாரிசு ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதன்பின், பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்திய பின், பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்
* இரண்டு திருமணம் அல்லது வேறு தவறான நடத்தையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அந்த பணியாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மற்றொரு திருமணம் செய்த குற்றத்திற்காக, போலீஸ் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் அடிப்படையில், அத்தகைய நபர் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும்
* அனைத்து தலைமைச் செயலகத் துறைகளும், அதன் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு, இந்த அறிவுறுத்தல்களை தெரிவித்து, தவறாமல் பின்பற்றச் செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE