சென்னை: உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்வாக பிரிவிற்கான 9 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு விழாவும் நடந்தது. இந்த விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். வணிக நீதிமன்றத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:திமுக அரசு அமைந்த பின்னர் உயர்நீதிமன்றத்தில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. மக்களின் மனசாட்சி என்ற முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தீர்ப்பு வழங்கி வருகிறார். இந்திய மக்களின் குரலாகவும் ஒலிக்கிறார். மக்களின் நம்பிக்கையை பெற்றவர். சட்டத்தின் ஆட்சியை பின்பற்றி தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது.
வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும். சென்னையில் உசசநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை தேவை. இவ்வாறு முதல்வர் பேசினார்.