மெகா சீரியலில் மூழ்கிய சமுதாயம், வெளியே வருகிறது!| Dinamalar

'மெகா சீரியலில் மூழ்கிய சமுதாயம், வெளியே வருகிறது!'

Added : ஏப் 24, 2022 | கருத்துகள் (3) | |
பக்கத்து வீட்டுக்காரர் போல தோற்றம்; தீர்க்கமான பார்வை; தெளிவான பேச்சு; ஜோக்கர், பேரன்பு, குடிமகன், சைக்கோ, வால்டர் இப்படி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து, தனக்கென ஒரு முத்திரையை பதித்து கொண்டவர். நடிப்பதுடன், சமூக சிந்தனை சார்ந்த விஷயங்களை, 'கதை சொல்லி'யாக மாறி, ஊர், ஊராக சென்று, விதைத்து வருபவர். இவ்வாறான பன்முகத்தன்மை கொண்டவர்தான், பவா செல்லதுரை.
'மெகா சீரியலில் மூழ்கிய சமுதாயம், வெளியே வருகிறது!'

பக்கத்து வீட்டுக்காரர் போல தோற்றம்; தீர்க்கமான பார்வை; தெளிவான பேச்சு; ஜோக்கர், பேரன்பு, குடிமகன், சைக்கோ, வால்டர் இப்படி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து, தனக்கென ஒரு முத்திரையை பதித்து கொண்டவர். நடிப்பதுடன், சமூக சிந்தனை சார்ந்த விஷயங்களை, 'கதை சொல்லி'யாக மாறி, ஊர், ஊராக சென்று, விதைத்து வருபவர். இவ்வாறான பன்முகத்தன்மை கொண்டவர்தான், பவா செல்லதுரை. அவிநாசியில் நடந்த பெருங்கதையாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரிடம், 'சண்டே ஸ்பெஷலுக்காக' பேசினோம்...எழுத்தாளராக இருந்து, 'கதை சொல்லி'யானது எப்படி?


சிறு வயதில் இருந்தே, வாசிப்பின் மீது ஆர்வம் அதிகம். வாசிப்பை மீறி, களப்பணியிலும் ஈடுபட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். நான் கதை சொன்னதை, என் மகன், விளையாட்டாக யூடியூபில் பதிவிட, அது, லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. கதை சொல்வதால் எனக்கு கிடைக்கும் புகழும், வெளிச்சமும் பிரபஞ்சன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களையே சேரும். தற்போதைய சூழலில், ஒவ்வொருவரும், 8 முதல், 10 மணி நேரம் உழைத்தால் தான். மூன்று வேளை உணவருந்த முடியும். தொழிலாளி எந்தளவு உழைக்கிறாரோ, அந்தளவு முதலாளியும் உழைக்க வேண்டும். இம்மாதிரியான காலகட்டத்தில், காரில் பயணிக்கும் போது, இரவு உறங்க செல்லும் போது பலரும் கதை கேட்கின்றனர்; மனம் மாறுகின்றனர்.கதை சொல்வதன் நோக்கம்...


வாசிப்பின் எல்லை விரிவடைந்து, வாசகர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பது தான். இளமை துள்ளல் அதிகமுள்ள, 35 வயதுக்குட்பட்டவர்கள் கூட, கதை கேட்கின்றனர். எனக்கு, பெண் ரசிகர்கள் அதிகம். 'டிவி', மெகா சீரியலில் மூழ்கி கிடந்த தமிழ் சமுதாயம், மெல்ல, மெல்ல அதிலிருந்து வெளியே வரத் துவங்கியுள்ளது. அவர்கள் நல்ல சினிமாவை நோக்கி வரத்துவங்கியுள்ளனர்.சினிமாவை பற்றி...


மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை மக்கள் ஏற்று கொள்கின்றனர். சினிமாவுக்குள் இலக்கியம் சார்ந்தவர்கள் வரக்கூடாது என்ற நிலை மாறியிருக்கிறது. சினிமா இயக்குனர்கள், கோடியில் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், இலக்கியவாதிகளுக்கு அந்தளவு சம்பளம் கிடையாது. பணம் மட்டும் தான், இருவரையும் வித்தியாசப்படுத்துகிறது. இயக்குனர்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் என நிர்ணயித்தால், படம் இயக்க யாரும் வர மாட்டார்கள்.சில படங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிறதே?


விமர்சன ரீதியாக ஒரு படம் அணுகப்படுவது ஆரோக்கியமானது தான். வன்மத்தோடு அணுகப்படுவது தான் ஆபத்தானது. எந்தவொரு சினிமாவையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதன் மீதான விமர்சனங்களை அறிவுப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமாக எதிர்கொள்வது தான் இயக்குனர், சினிமா குழுவினருக்கு நல்லது. நல்ல படங்களை ரசிக்கும் 'கிளாசிக்' பார்வையாளர்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது.இளம் இயக்குனர்கள் குறித்து...


அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் போதாது; ஒரு படத்தை இயக்கி, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் உள்ளதே தவிர, அதற்கான உழைப்பை செலுத்த அவர்கள் தயாராக இல்லை. சினிமாவுக்குள் போன பிறகும், வாசிப்பை தொடர்பவர்கள் தான் வெற்றி பெறுகின்றனர்.பட வாய்ப்புகள்...


நிறைய பட வாய்ப்புகள் உள்ளன. வெறும், 20 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் ஒரு சினிமாவில், 70 வயது கதாபாத்திரத்தில், ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கவுதம் மேனனின், சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படம் எனக்கு, திருப்பு முனையை ஏற்படுத்தும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X