வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கொலை சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
பழவூர் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற எஸ்.ஐ., மார்க்ரெட் தெரசாவை இரவு 10:00 மணியளவில் பின்தொடர்ந்து சென்ற நபர், தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்தார். நிலை குலைந்தவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். எஸ்.ஐ.,யின் இடது கன்னம், கழுத்து, வலது மார்பில் கத்தி குத்துகள் விழுந்தன. உடன் இருந்த போலீஸ்காரர்கள் தடிவீரன், ரமேஷ், பெண் போலீஸ் லட்சுமி ஆகியோர் எஸ்.ஐ.,யை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் உயர்தர சிகிச்சை அளிக்க, மார்கரெட் தெரசா திருநெல்வேலி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், டிஜிபி சைலேந்திரபாபு, கலெக்டர் விஷ்ணு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், மார்க்ரெட் தெரசாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து தமிழக அரசு வழங்கிய 5 லட்ச ரூபாய்க்கான நிவாரணத்தையும் அவர்கள் வழங்கினர்.
பின்னர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 8 கோடி மக்கள் வசிக்கும் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு என்று தெரிவித்தார்.

சைலேந்திரபாபு பேசுகையில், கடந்த மாதம் குடிபோதையில் வந்த ஆறுமுகத்திற்கு அபராதம் விதித்ததை மனதில் கொண்டு கொடை விழாவிற்கு பாதுகாப்பிற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கிலேயே குற்றவாளி இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். அதை சாமர்த்தியமாக சமாளித்து உதவி ஆய்வாளர் உயிர் தப்பியுள்ளார். இதில் தொடர்புடைய ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். உடனடியாக கைது செய்த போலீசார் லட்சுமி ரமேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரது செயல்கள் பாராட்டுக்குரியது. அவர்களை பாராட்டி சான்றிதழ்களும் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாகவே தமிழகத்தில் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை குறைவு. தென் மாவட்டங்களில் பழிக்குப்பழியாக கொலை சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 80 கொலைகள் குறைவாக நடந்துள்ளது.
காவல்துறையினருக்கும் பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்பட காவல் நிலையத்தில் வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். மன உளைச்சலில் உள்ள காவலர்களுக்கு மனநல பயிற்சி அளிப்பதற்கு தமிழக அரசு10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. குட்கா கஞ்சா போன்ற போதை பொருட்கள் தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படுகிறது. வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படுவதால் கஞ்சா குட்கா போன்றவை அதிகம் விற்கப்படுவது. போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE