வில்லேஜ் ஓட்டுகள் கை பக்கம் சாயுமா?
தங்கம் விளையும் தனித் தொகுதியின் 168 விலேஜ்களில் 75 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. கிராம பஞ்சாயத்து தேர்தலின் போது 55 சதவீத ஓட்டுகள் பூ காரங்களுக்கு போய் சேர்ந்தது.அதனால், அசெம்பிளி தேர்தலிலும் விலேஜ் ஓட்டுகள் திசை மாறக்கூடாது என்பதற்காக அந்த ஓட்டுகளுக்கு மடை கட்டும் உஷார் நடவடிக்கையை மேடம் செய்து வர்றாங்களாம்.
அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை யார் யார் ஆக்கிரமிப்பு செய்திருக்காங்க என்ற விபரங்களை தாசில்தார், ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள், கிராம கணக்காளர்கள் மூலம் வாங்கிட்டாங்க. ஆக்கிரமிப்பு நிலத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க, தனக்கு தேர்தலின் போது விசுவாசமாக இருக்க ஆல்ரவுண்டர் வேலைகளை செய்து வர்றாங்க.
பூ காரங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர்களும், நிலத்துக்காக மேடம் பக்கம் சாய்ஞ்சிட்டாங்க. அப்படி இப்படி கூட ஓட்டு மாறி போய்விடக் கூடாது என்பதற்காக, கை கட்சியின் அசெம்பிளி மேடம் அரசு தரிசு நிலத்தை காட்டி 'ஓவர் டேக்' செய்துட்டாங்க. தம் பக்கம் வராத ஓட்டுகளையும் இழுக்குறாங்க. எல்லாமே ஓட்டு பாலிடிக்ஸ் தானாம்.
முக கவசம் அணிய மறக்கலாமா?
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க மாநில அரசு எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருது. மறுபடியும் அனைவருமே முக கவசம் அணிய வேணும்னு உத்தரவு போட்டிருக்காங்க.எனவே, பொதுமக்கள் முக கவசம் வாங்க, அணிய அக்கறை காட்டுறாங்க. கோல்டன் சிட்டி நகராட்சி அரங்கத்தில் அரசு நிலம் பரிசீலனை கூட்டம் நடந்தது.வட்டாட்சியர் மேடம், ஒருசில கிராம ஊழியர்கள் மட்டுமே முக கவசம் அணிந்து இருந்தாங்க.
ச.ம.உ., மேடம் உட்பட 70 சதவீதம் பேர் முக கவசம் அணியல. அரசு உத்தரவை மதிக்கல. கிருமி நாசினி தெளிக்க மறந்துட்டாங்க.ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோல்டு சிட்டியில் மட்டுமே 400க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு உயிரை விட்டதை மறந்துட்டாங்களோ?நம்மையும், நம்மை சுற்றி இருப்பவங்களையும் காப்பாற்ற வேணாமா. இதற்கு கடுமையான அபராத உத்தரவு, ஊரடங்கு நடவடிக்கை வரணுமா?
திட்டங்கள் அமலுக்கு வரலையே!
முனிசிபாலிட்டிக்கு வருமானம் பெருக்க திட்டம் என்னவோ பெருசா போடுறாங்க. ஆனால், திட்டம் போடுவது போல வர வேண்டிய தொகைகள் வந்து சேரவில்லையே.
பெமல் தொழிற்சாலையின் சொத்து வரி பாக்கி, கோடி ரூபாய்க்கு மேல் வர வேண்டியுள்ளது. அதனை சாமர்த்தியமாக பெற முடியலையே. கோல்டு மைன்ஸ் சொத்து வரியும் நீர் மேல் எழுத்தாக உள்ளது.முனிசிபாலிட்டி கட்டடங்கள், வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வரி, கட்டணம் வந்தபாடில்லை. நீதிமன்ற உத்தரவுப்படியும் ஏலம் விடவில்லை.
ரா.பேட்டையின் புல் மார்க்கெட்டை தரை மட்டமாக்கி, கீழ்த்தளம் வாகன நிறுத்துமிடமாகவும், முதல் தளம் சூப்பர் வணிக வளாகமாகவும் கட்டுவதாக அறிவித்தாங்களே, அதை எப்போது துவங்குவாங்கன்னு நகரமே எதிர்பார்க்கிறது.இதனாலும் பல கோடி ரூபாய் டிபாசிட் தொகையும், மாதந்தோறும் வாடகை கட்டணமும், வாகனங்கள் நிறுத்த வாடகையும் குவியுமே. வருமானத்துக்காக அறிவிக்கிற திட்டத்தில் குறையே இல்லை. ஆனால் அமலுக்கு வரலையே.
'வீடுகளை சொந்தம் ஆக்குங்கள்'
ஓல்டு சிட்டியான, கோல்டு சிட்டியை மாநில அரசு குடிசை பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பிலும், அறிவிக்க வேண்டாம் என இன்னொரு தரப்பிலும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக தங்களின் கருத்தை வாத விவாதங்களாக வெளிப்படுத்தி வர்றாங்க.
செங்கொடிகள், நீலக்கொடி, சாம்பியன் பகுதியை சேர்ந்த மாஜி முனிசிபாலிட்டி தலைவர் உட்பட சில ஜாதி சங்கங்கள், 'குடிசைப் பகுதியாக மாற்றக்கூடாது. குடியிருக்கும் வீடுகளை சொந்தம் ஆக்குங்கள்' என்கிறாங்க.ஆனால், ச.ம.உ., நகராட்சி 'தல' முனி, 'மாஜி' தலைவரான பாதுகாப்பு குழுக்காரர், குடிசையா மாற்ற வேணும்னு வலியுறுத்துறாங்க.
இந்த இரு தரப்பு வாதங்களை ஊரெல்லாம் பேச வைக்க, ஊடகங்களும் 'பிசி' ஆகியிட்டாங்க. தேர்தல் நேரத்தில் இம்மாதிரியான பல ஸ்டன்ட்களை வீடற்ற பொதுமக்கள் பார்த்து பார்த்து பழகி விட்டதால், இப்பிரச்னை அசெம்பிளி தேர்தல் நடந்து முடியும் வரை ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர். தேர்தலுக்காக இன்னும் பல திட்டங்கள், கோரிக்கைகள், சலுகை அறிவிப்புகள், வந்த வண்ணம் இருக்கும்.