வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''தி.மு.க.,தான் நம் 'நம்பர் ஒன்' எதிரி'' என, தமிழக பா.ஜ., தலைவர்களிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பா.ஜ.,வை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் சென்னைக்கு வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் தங்குவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவடியில் தங்கினார். அங்கு அவரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ரகசியமாக சந்தித்தனர்.
அவர்கள் அமித் ஷாவிடம், 'தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. 'இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், அங்கிருந்து பலர் தமிழகத்துக்கு வருகின்றனர். அவர்களுடன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் வரும் அபாயம் உள்ளது' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின், தன்னை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளிடம், அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களிடம், 'பா.ஜ.,வுக்கு தி.மு.க., தான் நம்பர் ஒன் எதிரி. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும். 'இதற்கு, பா.ஜ., தலைமை முழு ஆதரவு அளிக்கும்' என, அமித் ஷா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மதமாற்றம் நடப்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும், அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அமித் ஷா, டில்லி திரும்பும் முன், 'யு டியூப்' சமூக ஊடகவியலாளர்கள் 25 பேரை அவரிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். அவர்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அமித் ஷா, 'தமிழகத்தில் மவுனப்புரட்சி நடக்கிறது' என தெரிவித்ததாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. 'வரும் 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது பா.ஜ., வெற்றி பெற வேண்டும்' என, தமிழக தலைவர்களிடம் அமித் ஷா வலியுறுத்தியதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- புதுடில்லி நிருபர் -