வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல்கலை கழகங்களின் துணைவேந்தர்களை, இதுவரை கவர்னர் தான் நியமனம் செய்து வந்தார். தற்போது, அந்தப் பொறுப்பை, முதல்வரே எடுத்துக் கொண்டு, தன்னை வேந்தர் அந்தஸ்துக்கு உயர்த்திக் கொள்ள, சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில், ஆரம்பத்தில் சென்னை பல்கலைக்கழகம் மட்டுமே இயங்கி வந்தது. அதன் துணைவேந்தராக லட்சுமண சாமி முதலியார் இருந்து, மிகச்சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். அதன்பின், மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு, டாக்டர் தெ.போ. மீனாட்சி சுந்தரனார் துணைவேந்தரானார்.
இவர் அரசியல்வாதிகளின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாமல், பணியாற்றி புகழ் பெற்றார்; தொடர்ந்து, பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. அண்ணா பெயரில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், எம்.ஜி.ஆர்., பெயரில், மருத்துவ பல்கலைக்கழகமும் உருவாகின. கழகங்களின் ஆட்சியில் ஊழல் பெருச்சாளிகள் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டதால், சிலர் கோடிக்கணக்கில் ஊழல் செய்து சிறைக்கு சென்றனர். அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த சுரப்பா, அ.தி.மு.க., ஆட்சியின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் செயல்பட்டதால், விசாரணை கமிஷனை சந்திக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.
இப்போது கோடி கோடியாக பணம் கொடுத்து, துணைவேந்தர் பதவியை பெற பலர் தயாராக இருக்கின்றனர். ஆட்சியில் இருப்பவர்களும் பணம் சம்பாதிக்க முடிவு செய்து விட்டதால், துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்க தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அதனால், தங்களுக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து, அதை சட்டசபையிலும் நிறைவேற்றி உள்ளனர். என்ன தான் புதிய சட்டம் கொண்டு வந்தாலும், அதற்கு கவர்னர் ஒப்புதல் தர வேண்டும்; அவர் ஒப்புதல் தருவாரா என்பது, 'டவுட்' தான்!

'நீட்' விலக்கு மசோதாவை எப்படியாவது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க, தி.மு.க., தலைவர் எடுத்த முயற்சிகள், கவர்னரிடம் செல்லுபடியாகாமல் 'பிளாப்' ஆகி விட்டன. அதனால், 'தமிழகத்திற்கு கவர்னரே வேண்டாம்' என, ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதை கவர்னருக்கு அனுப்பாமல், நேரடியாக ஜனாதிபதியிடமே கொண்டு போய், முதல்வர் ஸ்டாலின் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. தங்கள் இஷ்டத்திற்கு கவர்னர் செயல்படவில்லை என்பதால், அவருடன், 'நீயா, நானா' என்ற 'ஈகோ' போட்டியில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முடியாது என தெரிந்தும், தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதல்வர் ஸ்டாலின், இப்போது நேரத்திற்கு ஒரு வேஷம் போட்டு, மக்களை ஏமாற்ற முயன்று வருகிறார். இதன் அடுத்த கட்டம் தான், துணைவேந்தர்களை அரசே நியமிக்க சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது. திராவிட செம்மல்களின் இந்த சடுகுடு ஆட்டத்தால், ஜனநாயகம் ரொம்பவே அசிங்கப்பட்டு போயிருக்கிறது.