பெங்களூரு :'ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது' எனக்கூறிய கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிற்கு ஆதரவாக கர்நாடக மாநில தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நான் ஈ திரைப்படத்தின் வாயிலாக பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது' என்றார்.
இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், 'ஹிந்தி தேசிய மொழி இல்லையென்றால், எதற்காக உங்கள் மொழி படங்களை ஹிந்தியில், 'டப்பிங்' செய்து வெளியிடுகிறீர்கள்.
'ஹிந்தி என்றுமே நம் தாய் மொழியாகவும், தேசிய மொழியாகவும் இருக்கும்' என்றார். இதை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.இதுகுறித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று கூறுகையில், “நடிகர் கிச்சா சுதீப் கூறியது சரிதான். ஹிந்தி, நம் தேசிய மொழி அல்ல. பெரும்பாலான மக்கள் பேசுவதால், ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்கமுடியாது,” என சாடினார்.
கர்நாடகவின் மற்றொரு முன்னாள் முதல்வரும், காங்., கட்சியைச் சேர்ந்தவருமான சித்தராமையா கூறுகையில், “ஹிந்தி நம் தேசிய மொழி இல்லை. ஒவ்வொரு மொழிக்கும், அதன் மக்கள் பெருமைப்பட பல வரலாறுகள் இருக்கும்,” என்றார்.மாநில காங்., தலைவர் சிவகுமார் கூறுகையில், “நம் நாட்டில், 20 ஆயிரம் மொழிகள் உள்ளன. இவற்றில் எதுவும், மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்தக்
கூடாது,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE