மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகள், பல்வேறு பிரச்னைகளால் ஆட்டம் காண துவங்கியுள்ளன.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கருத்து வேறுபாடு
இங்கு, முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன், அனுமன் சாலிசா துதியை பாடுவோம் என அறிவித்த சுயேச்சை பெண் எம்.பி., நவ்நீத் ராணா, அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வு மான ரவி ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகளால்
அதிருப்தியடைந்துள்ள சிவசேனாவை சேர்ந்த ௧௮ எம்.எல்.ஏ.,க்கள், கட்சியிலிருந்து விலகி, பதவியையும் ராஜினாமா செய்ய ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன. கூட்டணியில் இருந்தாலும், சிவசேனாவுக்கும், காங்கிரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.
![]()
|
இதனால், அடுத்து வரும் மாதங்களில், மஹாராஷ்டிராவில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரே அரசின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான மோதல், நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. கடந்த 2020ல் கெலாட் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார். அவரை காங்., முன்னாள் தலைவர் ராகுலும், பொதுச் செயலர் பிரியங்காவும் சமாதானப்படுத்தினர். ஆனாலும், பைலட்டுக்கு கெலாட் எந்த முக்கியத்துவமும் தரவில்லை.
எதிர்பார்ப்பு
இதனால், கெலாட்டுக்கு எதிராக, சச்சின் பைலட் விரைவில் போர்க்கொடி துாக்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மைக்கு சற்று அதிகமான இடங்கள் தான் காங்கிரசிடம் உள்ளன. பைலட் போர்க்கொடி துாக்கினால், கெலாட் அரசு கவிழும் அபாயம் உள்ளது.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ஹேமந்த் சோரன், ஒரு நிலக்கரி சுரங்கத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார் என, மாநில கவர்னரிடம் பா.ஜ., புகார் கொடுத்தது. இந்த புகாரை, கவர்னர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிஉள்ளார்.
குற்றச்சாட்டு நிரூபணமானால், ஹேமந்த் சோரனை பதவி நீக்கம் செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிடும். இதனால் ஜார்க்கண்டில் அரசியல் மாற்றம் ஏற்பட, அதிக வாய்ப்புகள் உள்ளன.மொத்தத்தில், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசுகள் ஊசலாடி வருகின்றன. நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலையில் நடக்க உள்ளது.
அதற்குள் இந்த மூன்று அரசுகளும் கவிழ்ந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது, பா.ஜ.,வுக்கு ஒரு சவாலாகவே இருக்காது. - புதுடில்லி நிருபர் -