வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹிந்தி மொழி பற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் தோன்றின. ஆகவே சமஸ்கிருதத்தை ஏன் தேசிய மொழியாக ஆக்க கூடாது என தெரிவித்துள்ளார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்.
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை பேசி சமயங்களில் வம்பில் மாட்டிக் கொள்வார். மும்பையில் தனது பட விழாவில் பங்கேற்ற இவரிடம் சில தினங்களுக்கு முன்னர் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் ஹிந்தி மொழி வார்த்தை சண்டை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கங்கனா அளித்த பதில் : ‛‛ஹிந்தி தேசிய மொழி என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்துள்ளது. அதனால் அஜய் தேவ்கன் கூறியதில் தவறில்லை. அதேசமயம் சுதீப்பின் உணர்வையும் புரிந்து கொள்கிறேன். ஹிந்தியை ஏற்காவிட்டால் மத்திய அரசையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். எப்போதும் வட இந்திய படங்கள், தென்னிந்திய படங்கள் என விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. இது வருத்தமளிக்கிறது, இது தேவையற்ற விவாதம்.
![]()
|
இங்கு நாம் மொழிவாரியாக வேறுபட்டு கிடக்கிறோம். இதை ஒன்றிணைக்க ஒரு பொதுவான மொழி அவசியம். ஹிந்தியை விட தமிழ் பழமையான மொழி. ஆனால் தமிழை விட பழமையான மொழி சமஸ்கிருதம். அதனால் சமஸ்கிருத மொழியை ஏன் தேசிய மொழியாக்க கூடாது. ஏனென்றால் தமிழ், குஜராத்தி, கன்னடம் போன்ற மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை.
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்கள் அவர்களின் தாய் மொழியில்தான் பேசுகின்றனர். ஆனால் காலனி ஆதிக்க வலராற்றால் துரதிர்ஷ்டவசமாக ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக இப்போது மாறிவிட்டது. இணைப்பு மொழியாக ஆங்கிலமா, ஹிந்தியா, சமஸ்கிருதமா அல்லது தமிழா எது இருக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் மனதில் வைத்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். என்னை பொருத்தமட்டில் சமஸ்கிருதம் பழமையான மொழி. ஆனால் இந்த மொழி பள்ளிகளில் கூட கட்டாயமாக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு கங்கனா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE