மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் சென்னை வந்திருந்தார். வழக்கமாக மத்திய அமைச்சர்கள் கவர்னர் மாளிகையிலோ அல்லது விருந்தினர் இல்லத்திலோ தங்குவர். கவர்னர் மாளிகையில் அமித் ஷா தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தங்காமல் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப்., விருந்தினர் மாளிகைக்கு சென்று விட்டார்.இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நடு இரவில் அமித் ஷாவைச் சந்திக்க ஒரு முக்கிய பிரமுகர் வந்தார். இந்த சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆவடியில் அமித் ஷா தங்கியுள்ளார். இங்கு தமிழக போலீசார் உள்ளே வர முடியாது; யாரை சந்தித்தாலும் வெளியே தெரியாது என்பது தான் இதற்கு காரணம் என டில்லியில் சொல்லப்படுகிறது.
தி.மு.க., குடும்ப வாரிசு ஒருவரது சிபாரிசின் அடிப்படையில் ஒரு பிரமுகர் நடு இரவில் அமித் ஷாவை சந்தித்துள்ளார். அவர்கள் அரசியல் பேசினரா அல்லது சொந்த விஷயம் பேசினரா என தெரியவில்லை. ஆனால் இந்த குடும்ப வாரிசின் செயல், நிச்சயம் ஸ்டாலினுக்கு எரிச்சலை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.
'இமேஜ்' மாறும் பிரதமர் அலுவலகம்
நம் நாட்டில் மிகவும் செல்வாக்கான அலுவலகம் என்றால், அது பிரதமர் அலுவலகம் தான். ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் 'சவுத் ப்ளாக்'கில் அமைந்துள்ளது இந்த அலுவலகம். இங்கு பல மாற்றங்கள் நடக்கும் என டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
பிரதமருக்கு ஆலோசனை வழங்க ஐந்து முக்கிய ஆலோசகர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்; அனைவரும் வயதானவர்கள்; எல்லாருக்கும் 75 வயதிற்கு மேல். விரைவில் இவர்கள் மாற்றப்படுவர் என சொல்லப்படுகிறது.
சில அதிகாரிகள் ஏழு ஆண்டுகளாக இங்கு பணியாற்றுகின்றனர். ஒருவர் அதிக ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றினால் ஒரு 'லாபி' உருவாகிவிடும்; அது கூடாது என நினைக்கிறாராம் மோடி.இவர்களுக்கு பதிலாக இளைஞர்களை பணியில் அமர்த்த மோடி முடிவெடுத்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலுக்கு இது அடித்தளமாக இருக்குமாம். பிரதமர், ஏற்கனவே பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிப்பாரா அல்லது வெளியிலிருந்து இளைஞர்களைக் கொண்டு வருவாரா என ஒரு பட்டிமன்றமே டில்லி வட்டாரங்களில் நடந்து வருகிறது.
பதவி யாருக்கு கிடைக்கும்?
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் ஜூன் இறுதியில் முடிவடைகிறது. இந்த பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்ந்தெடுக்க 36 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. இந்த ஆறு எம்.பி., பதவிகளில், தி.மு.க.,வுக்கு மூன்று கிடைக்கும்.கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்தால் தி.மு.க.,வுக்கு நான்காவது எம்.பி.,யும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த நான்காவது எம்.பி., பதவியை தங்களுக்கு ஒதுக்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டு வருகிறார். இந்த பதவி சிதம்பரத்திற்கா அல்லது அழகிரிக்கா என்பது தெரியவில்லை. ஆனால் இது குறித்து தி.மு.க., இதுவரை எந்த பதிலும் கூறாமல் மவுனமாகவே உள்ளது.
தி.மு.க.,வில் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது குறித்து டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது. டில்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருப்பவர், ஏ.கே.விஜயன். இவரது பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது.சட்டசபை தேர்தலின் போது எம்.எல்.ஏ., சீட் கேட்டார் இவர்; கிடைக்கவில்லை.
அதனால் கேபினட் அந்தஸ்தில் சிறப்பு பிரதிநிதியாக டில்லியில் நியமிக்கப்பட்டார்.இவருக்கு இந்த முறை ராஜ்யசபா சீட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ராஜ்யசபா சீட் உறுதி என்கின்றனர். மீதமுள்ள சீட் யாருக்கு என்பது புரியாத புதிராகவே உள்ளது.
தி.மு.க.,வுடன் நெருக்கம்
டில்லியில் உள்ள பா.ஜ.,வினரிடையே ஒரு விஷயம் கிசு கிசுக்கப்படுகிறது. தி.மு.க.,வைச் சேர்ந்த மூத்த எம்.பி.,யான, டி.ஆர்.பாலு, எந்த கோரிக்கை வைத்தாலும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உடனே சம்மதிக்கிறார். இருவருக்கும் இடையே ஏதாவது ரகசிய ஒப்பந்தமா என, பா.ஜ.,வினர் பேசுகின்றனர்.
அடுத்த இரண்டு மாதங்களில் எம்.பி.,க்கள் குழுக்கள் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கிறது. இதில் ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்கள் இடம் பெறுவர். லோக்சபாவை பொறுத்தவரை ஐந்து உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார் சபாநாயகர் ஓம் பிர்லா. இந்த முறை தி.மு.க.,வினருக்கு அதிக வாய்ப்பு கொடுத்துள்ளாராம் சபாநாயகர்.
இதற்கு பிரதமரின் அனுமதியும் உண்டு என சொல்லப்படுகிறது. தி.மு.க.,வினருக்கு வாய்ப்பு கொடுக்க வேறொரு காரணமும் உண்டு என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள். லோக்சபாவில் தி.மு.க., உறுப்பினர்கள் தேவையில்லாமல் பிரச்னை செய்ய மாட்டார்கள் என்கின்றனர்.