பெருந்தொற்று காலத்திற்கு பின் பள்ளி திறந்த பிறகு மாணவர்களின் நல்லொழுக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை சமீப கால சம்பவங்கள் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கின்றன.
பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் அவமதிக்கும் வகையிலான வீடியோக்கள், வகுப்பறையில் ஹீரோ, ஹீரோயின்களாக சித்தரித்தபடி உலா வரும் வீடியோக்கள், ரோட்டில் நடக்கும் மாணவர்கள் ஈடுபடும் கோஷ்டி மோதல் என, பல சம்பவங்கள் விவாதத்தை உருவாக்கி வருகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்பும் குறும்புக்கார மாணவர்கள் இருந்தனர்; கேலி செய்தனர். அப்போது வெளியே தெரியாமல் இருந்தது. தற்போது செய்திகள், சமூக வலைதளங்கள், மொபைல்போனால் பட்டி தொட்டியெல்லாம், இத்தகைய சம்பவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.இத்தகைய மாணவர்களை கண்டுபிடித்து, திருத்தவும், வழிநடத்த முடியாதபடியும், அதீத சுதந்திரங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறது, ஆசிரியர் தரப்பு.உண்மையில் சிக்கல் எங்குள்ளது, இதற்கு என்னதான் தீர்வு?
நன்னெறி வழிகாட்டல்
கந்தசாமி, பொதுச்செயலர், தேசிய ஆசிரியர் சங்கம்:

ஆசிரியர்களின் கரங்களை கட்டவிழ்த்து விட்டு, மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும்.'எமிஸ்' தளத்தில், CASE HISTORY' எனும், Column' ஏற்படுத்தி, மது, போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் சீண்டல்கள், ஆசிரியரிடம் தரம் தாழ்ந்து நடந்து கொள்ளுதல் போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் பற்றிய குறிப்பை பதிவு செய்யலாம். இது மாணவருக்கு எச்சரிக்கையாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உதவியாகவும் இருக்கும்.மாணவர்கள் தவறு செய்யும்போது, ஆசிரியர்கள் தாய் உள்ளத்தோடு மென்மையாக நடந்து கொண்டாலும், மாணவரின் மனதை பொறுத்து சில நேரங்களில் விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அப்போது, அரசியல், ஜாதி தலையீடு இன்றி நியாயமான விசாரணை நடைபெற்று தீர்வு காண வேண்டும்.இதுபோன்ற சூழலில் ஆசிரியர்கள் மனவேதனை அடைய வேண்டியுள்ளது. ஆசிரியர் மீது தவறே இல்லாத போதும், அவருக்கு ஏற்பட்ட துன்பம், அனுபவங்களை கேட்ட பல லட்சம் ஆசிரியர்கள் மாணவர்கள் தவறு செய்யும்போது அதை சுட்டி காட்டவே தயங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தற்போது, போக்சோ' சட்டம் சார்ந்து விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது போல தலைமையாசிரியரின் பரிந்துரை மற்றும் வேண்டுகோளுக்கு ஏற்ப, பள்ளிக்கு அருகில் உள்ள காவல் ஆய்வாளர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களின் ஒழுக்க கேடுக்கு கண்டிக்கும் வகையில் அறிவுரை வழங்கி செல்லலாம். பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்பவருக்கு கடும் தண்டனை வழங்குவதை உறுதி செய்யலாம்.கல்வி மாவட்ட அளவில் நம் துறையில் உளவியல் படித்த அல்லது உளவியல் ஆலோசகர் அல்லதுமன நல மருத்துவரை நியமித்து அவர் தினமும் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு நன்னெறி வழிகாட்டலை உறுதிப்படுத்துதல் வேண்டும்.கட்டாய நீதி போதனை வகுப்புகள் நடத்தலாம். விருப்பமுள்ள அந்தந்த மதத்தை சார்ந்த ஆசிரியர்களை பயன்படுத்தி அனைத்து மதத்தினருக்கும் வாரம் ஒரு முறையாவது ஆன்மீக மற்றும் பண்பாட்டுக் கல்வி வழங்கலாம்.ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் மீண்டும் கடவுள் வாழ்த்து பாடலை கொண்டு வரலாம். அறநெறி இலக்கியங்களை அதிகப்படுத்தலாம். ராணுவ வீரர்களின் வீர சாதனைகள் மற்றும் தேச பக்தியூட்டும் தியாக வரலாறுகளை ஒரு பாடம் வைத்து கற்பிக்கலாம். தேசபக்தி, சமுதாய நலன் சார்ந்த திரைப்படங்களை பள்ளியிலேயே திரையிடலாம்.பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு தடைவிதித்து, மீறுபவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். 'சிசிடிவி' இல்லாத பள்ளிகளில் தேவையான இடத்தில் பொருத்த வேண்டும்.
தேவை உரையாடல்
உமா மகேஸ்வரி, அரசுப் பள்ளி ஆசிரியை, கல்வியாளர்:

எல்லா தவறையும் குழந்தைகள் மீது சுமத்திவிட முடியாது. ஆசிரியர்கள் பெற்றோர் சேர்ந்து தீர்வு காண வேண்டும். மாணவர்கள் நடவடிக்கை சரியில்லை என, தெரிந்தவுடன், உரையாட வேண்டும்.அவர்களால் முடியாவிட்டால் பெற்றோர்களை அழைக்க வேண்டும். சில பெற்றோர்கள் மாணவர்கள் மீது தவறு இருப்பதையே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உதவியை நாட வேண்டும். மாணவர்களுக்கு தேவை உரையாடல். மனம் திறந்து பேசுவதற்கு ஒரு நபர். உளவியல் ஆலோசகராக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் டேட்டா ஆபரேட்டர்களாக மாறியுள்ளனர். ஆசிரியர்கள் இன்று அரசு மற்றும் கல்வித்துறையை கைகாட்டி, கையை கட்டிப்போடுவதாக சொல்கின்றனர். மாணவர்களை அடிக்கக்கூடாது என்றுதான் சட்டத்தில் இருக்கிறதே தவிர கண்டிக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை.
டாக்டர் சரண்யா, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், கல்வி உளவியலாளர்:

மாணவர்கள் தவறை தொடர்ந்து செய்யும்போது, மரியாதை குறைவாக நடந்து கொள்ளும்போதும், சில ஆசிரியர்கள் பொறுமை இழந்துவிடுகின்றனர். மாணவர்களை அடிக்கக்கூடாது என, சட்டத்தை கொண்டு வந்தபோதே ஆசிரியர்கள் மாணவர்களை நேர்மறையாக கையாள்வது, திருத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சியளித்திருக்க வேண்டும். ஆசிரியரும், பெற்றோரும் கைகோர்த்து ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும். ஆசிரியர் ஒரு விஷயத்துக்கு தண்டிக்கிறார் என்றால் அதில் உள்ள நியாயங்களை பெற்றோர் உணர வேண்டும். ஆசிரியர்கள் ஜாதி, மத அடிப்படையில் குழந்தைகளிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு. அத்தகைய சூழலில் பெற்றோர் ஆசிரியரிடம் கேட்கலாம். படிப்பு சார்ந்த விஷயங்களில் ஆசிரியர் கண்டிக்கிறார் என்றால் பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் குழந்தை சரியாக வளரும். என் பிள்ளையை கேட்க நீங்கள் யார்?' என்றால் அறத்தை ஆசிரியர்கள் எப்படி புகட்டுவது?