கோடை காலத்துக்கு ஏற்ற பழங்களை, இயற்கை நமக்கு அளித்து இருக்கிறது. அதில் முக்கியமானது, மாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி. இவற்றில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன...?
மாம்பழம்

மாம்பழத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் சுவை மாறுபட்டாலும் சத்துக்கள் மாறுபடுவதில்லை. 100 கிராம் மாம்பழச்சதையில்,- 81 கிராம் நீர்ச்சத்து உள்ளது. கரோட்டின், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் அதிகம் உள்ளன. மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தை தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை குணப்படுத்தும்.
பலாப்பழம்

எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத கனி இது. அதுவும் பலாப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட். அப்படி சாப்பிட்டால் பல நோய்கள் தீரும். மூளை நரம்புகள் வலுப்பெறும். வாதநோய் மற்றும் மனநல பாதிப்புகள் கூட சரியாகும். பலாப்பழத்தில் வைட்டமின் 'ஏ' அதிகம் இருப்பதால் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தருகிறது. நரம்புகள் உறுதியாகும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும். ஆனால், சுவையாக இருக்கிறது என்பதற்காக அதிகமாக சாப்பிட கூடாது.
தர்பூசணி

வெயில் காலத்தில் தர்பூசணி பழம் அதிகம் சாப்பிடுவதால், சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும். சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். -ரத்த ஓட்டம் சீராகும். வெயில் காலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறி விடுவதால், ரத்தத்தில் நீர்சத்து குறைந்து, ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால், ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. கோடையில் வெப்பம் அதிகரித்து, உடலில் இருக்கின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் வெப்பமடைகிறது. இதனால் சோர்வு உண்டாகும். இந்த சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வும் மலச்சிக்கலும் நீங்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள், இந்த மூன்று பழங்களையும் அளவோடுதான் சாப்பிட வேண்டும்.