கிரைம் ரவுண்ட் அப்: ஆசிரியையை தாக்க முயன்ற 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

Updated : மே 03, 2022 | Added : மே 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையை தாக்க முயன்ற இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இப்பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்கள் ஆசிரியை முன் நடனமாடுவதும், ஒரு மாணவர் இருக்கையால் ஆசிரியையை அடிக்க பாய்வதும் தொடர்பான வீடியோ வைரலானது. இதுதொடர்பாக விசாரிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு
crime, arrest, murder

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையை தாக்க முயன்ற இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இப்பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்கள் ஆசிரியை முன் நடனமாடுவதும், ஒரு மாணவர் இருக்கையால் ஆசிரியையை அடிக்க பாய்வதும் தொடர்பான வீடியோ வைரலானது. இதுதொடர்பாக விசாரிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.தக்கலை மாவட்ட கல்வி அதிகாரி எம்பெருமாள் விசாரணை நடத்தினார். இதில் இரண்டு மாணவர்களின் பெற்றோரும் மகன்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இருப்பினும் இரண்டு மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
லாரி டிரைவர் வெட்டி கொலை


வேலுார் : வேலுார் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் சாலைஓரம் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தகவல் வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர், ஒடுக்கத்துாரைச் சேர்ந்த லாரி டிரைவர் பூபதி, 40, என்பதும், அப்துல்லாபுரத்தில் வசித்து வந்தவர், நண்பர்களுடன் மதுகுடித்து விட்டு வந்தபோது ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
2 வீடுகளில் 80 பவுன் நகை, பணம் கொள்ளை


எரியோடு : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குருக்களையன்பட்டியை சேர்ந்த இறைச்சிக்கடை நடத்தி வரும் பாண்டியன் வீட்டின் கதவை பட்டப்பகலில் உடைத்த கொள்ளையர்கள் 40 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.


குலதெய்வ வழிபாட்டிற்கு பாண்டியன் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை சிறுமலை சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை,ரூ. 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


பாண்டியன் குடும்பத்தினர் கூறுகையில்,'வீட்டில் வளர்ந்து வந்த நாயை நேற்று முன் தினம் இரவு முதல் காணவில்லை. வெளியூர் செல்வதை அறிந்தவர்கள் உதவியுடன் நாய் கடத்தப்பட்டிருக்கலாம். அதை தொடர்ந்து இக்கொள்ளை நடந்துள்ளது, என்றனர். வேடசந்துார் டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, தடயவியல் துறையினர் விசாரணை நடத்தினர்.


* எஸ்.புதூர் ஒன்றியம் கே.இடையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 50, விவசாயி. நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்றுள்ளார்.மதியம் 2:30 மணிக்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.


உள்ளே சென்று பார்த்த போது 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த 40 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது.பழனிச்சாமி போலீசில் புகாரளித்தார். கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். புழுதிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பை மீட்க கோரி 20 பேர் தீக்குளிக்க முயற்சி


தர்மபுரி : பொது பாதையிலுள்ள தனியார் ஆக்கிரமிப்பை மீட்க வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் உட்பட, 20 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பூதிநத்தத்திலுள்ள பட்டா நிலத்தில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள, 12 அடி சாலையை 90 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அப்பகுதியில் நிலம் வாங்கிய சிலர், பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், அச்சாலையை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த விடாமல் தடுக்கின்றனர்.இதுகுறித்து, கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலங்களில், பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.


அதிருப்தியடைந்த மக்கள் 20 பேர், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியிலிருந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அவர்களை தடுத்தனர்.கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன், 'பொதுப்பாதை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' ‍என்றார். இதையடுத்து, அவர்கள் கலைந்தனர்.
கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்தவர் கைது


சேலம் : கள்ளக்காதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


சேலம், தாதகாப்பட்டி கேட்டைச் சேர்ந்தவர் மணிமாறன், 31. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த விதவை பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த மணிமாறன், பெண்ணின் 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விதவை பெண் மற்றும் அவரின் முதல் கணவரின் உறவினர்கள், சிறுமியை கோவையில் உள்ள அவரின் அத்தை வீட்டில் தங்க வைத்தனர்.


இதை தெரிந்து கொண்ட மணிமாறன், அங்கும் சென்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். சிறுமியின் உறவினர்கள், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். மணிமாறனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி


பள்ளிபாளையம்: சமயசங்கிலி பகுதியில் இடி, மின்னல் தாக்கி, 16 செம்மறி ஆடுகள் இறந்தது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே புதுாரில் வசிக்கும் விவசாயி பொன்னுசாமி, 60. இவர், தன் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, தோட்டத்தில் உள்ள பட்டியில், 20 செம்மறி ஆடுகளை அடைத்து, வீட்டிற்கு சென்றார். இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது.அப்போது, மின்னல் தாக்கியதில், 16 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு, பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, ஆடுகள் இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


வருவாய்த் துறை மற்றும் கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சமயசங்கிலி வி.ஏ.ஓ., செந்தில்குமார், கால்நடை உதவி டாக்டர் சுசிலா ஆகியோர் நேரில் விசாரணை செய்தனர்.அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த ஆடுகளின் மதிப்பு 2 லட்சம் ரூபாய். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தந்தை அடித்து கொலை; 'பாசக்கார' மகன் கைது


ஈரோடு: ஈரோடில் சொத்துக்காக தந்தையை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு, வேப்பம்பாளையம் பிரிவு, கல்லுாரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, 68; இவரது மனைவி ருக்மணி, 65. இவர்களின் மகள் பிரியதர்ஷினி, 37; மகன் ரவிக்குமார், 35. ரவிக்குமாருக்கு திருமணமாகவில்லை.தனியார் வங்கி கிரெடிட் கார்டு கலெக்ஷன் பிரிவில் வேலை செய்கிறார். மகள், பூலப்பாளையம், வெள்ளியங்காடு பகுதியில் கணவனுடன் வசிக்கிறார்.தந்தை இறந்து விட்ட தாக பிரியதர்ஷினிக்கு, ரவிக்குமார் நேற்று காலை 6:30 மணிக்கு தகவல் தந்துள்ளார்.


அதிர்ச்சியடைந்த அவர் அங்கு சென்று பார்த்தபோது, தந்தையின் உடலில் காயம் இருந்ததால், எஸ்.பி., அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார்.டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையிலான தாலுகா போலீசார் விசாரித்தனர். இதில், தந்தையை மரக்கட்டையால் தாக்கி கொன்றதை மகன் ஒப்புக்கொண்டார்.போலீசார் கூறியதாவது: பிச்சாண்டாம்பாளையத்தில் 1.5 ஏக்கர் நிலம், பழனிசாமி பெயரில் உள்ளது. அதை கேட்டு, ரவிக்குமார் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.


இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவும், தகராறு செய்துள்ளார்.மது போதையில் இருந்த ரவிக்குமார், மரக்கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். பின் வெளியே சென்று விட்டார். நேற்று காலை மனைவி ருக்மணி எழுப்பியபோது கணவர் எழவில்லை. அதன் பிறகே அவர் இறந்து விட்டது தெரிந்தது. ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.மகன் துாக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சியில் பெற்றோர் விபரீதம்


ராணிப்பேட்டை : மகன் துாக்கில் சடலமாக தொங்கியதை பார்த்த அதிர்ச்சியில், பெற்றோரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்


ராணிப்பேட்டை மாவட்டம், காரையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 62; சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி, 50. மகன்கள் விக்னேஷ், 31; ரமேஷ், 30; நான்கு ஆண்டுகளுக்கு முன், மூத்த மகன் விக்னேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடந்த 2000ம் ஆண்டு ரமேசுக்கும், சென்னையைச் சேர்ந்த பாரதி, 25, என்பவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஆறு மாத பெண் குழந்தை உள்ளது.


கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையுடன் பாரதி சென்னை சென்று விட்டார்.பலமுறை அழைத்தும் பாரதி வராததால், ரமேஷ் மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேலுாரிலுள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வாரம் வீடு திரும்பினார்.நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டில் துாங்கினர். மறுநாள் காலை பெற்றோர் எழுந்து பார்த்த போது, படுக்கை அறையில் ரமேஷ் துாக்கிட்டு சடலமாக தொங்கினார்.


விரக்தியடைந்த பெற்றோரும், அதே அறையில் தனித்தனியாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாக வீட்டு கதவு திறக்கப்படாததால், அப்பகுதியினர் வந்து பார்த்த போது, மூவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைத்தறித் துறை அமைச்சர் காந்தி இறந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
எல்லை தாண்டி நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது


நாகப்பட்டினம் : தமிழக கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்திய கடலோர காவல் படையினர், நேற்று முன்தினம் சர்வதேச கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தமிழக கடல் பகுதியில், நாகைக்கு நேர் கிழக்கே சந்தேகப்படும்படியாக மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகை நெருங்கி விசாரித்தனர்.அப்படகு இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த அனுரா என்பவருக்கு சொந்தமானது என்பதும், 21ம் தேதி, திரிகோணமலையில் இருந்து புறப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.


இதையடுத்து, படகில் இருந்த இலங்கை, திருகோணமலையைச் சேர்ந்த மதுஷா, 31, உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்களை, படகுடன் காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்து வந்த இந்திய கடலோர காவல் படையினர், நாகை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


latest tamil news
கடத்தப்பட்ட சிறுமி மீட்பு; கணவன் - மனைவி கைது


நாமக்கல் : நாமக்கல் அருகே கடத்தப்பட்ட சிறுமி, நள்ளிரவில் மீட்கப்பட்டார். கடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்


நாமக்கல் மாவட்டம், காளிசெட்டிபட்டி, மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் சரவணன், 39. சில நாட்களுக்கு முன் இவர் வேலைக்கு சென்று விட்டார்.ஏப்., 30ம் தேதி இரவு, இவரது மனைவி கவுசல்யா, 29; மகன் ஜெய்சன், 14; மகள் மவுலிஷ்னா, 11, வீட்டு மொட்டை மாடியில் துாங்கினர். அங்கு வந்த இரு மர்ம நபர்கள், தாய், மகனை கட்டிப்போட்டு, மவுலிஷ்னாவை கடத்தினர்.


இது குறித்து, எருமப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஏழு தனிப்படைகள் அமைத்து போலீசார் சிறுமியை தேடினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, சரவணன் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் முருகேசனுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது.அதில் பேசியவர், அலங்காநத்தம் பிரிவு பெட்ரோல் பங்க் அ‍ருகே, மவுலிஷ்னா விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டதுடன், அவரை கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 35, அவரது மனைவி பொன்னுமணி, 27, ஆகியோரை கைது செய்தனர்.


விசாரணையில், சரவணன் குடியிருக்கும் வீட்டில் மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன் குடியிருந்துள்ளார். அப்போது, மணிகண்டன், சரவணனிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை கேட்டு, சரவணன், மணிகண்டன் மனைவியை தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்கு பழிவாங்கும் விதமாக, சரவணன் மகளை கடத்தி, என்.புதுக்கோட்டையில் உள்ள அவர்கள் வீட்டில் வைத்திருந்ததாக கூறி உள்ளனர். கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மின் கணக்கீட்டாளர் பணிக்கு ரூ.27 லட்சம் கொடுத்து ஏமாற்றம்


ராமநாதபுரம் : மின் கணக்கீட்டாளர் பணிக்கு ரூ.27.50 லட்சம் கொடுத்து ஏமாற்றப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட நான்கு இளைஞர்கள் கலெக்டர் சங்கர்லால் குமாவத், எஸ்.பி., கார்த்திக், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.


பரமக்குடி சுசீந்திரன் 38, சிவகங்கை மாவட்டம் திருக்கல்படி சேதுராமன் மகன்கள் கோபிநாதன், முருகேசன் 35, திருச்சி மணப்பாறை வலையபட்டி பெரிய சின்னான் மகன் பாரதி 28, ஆகியோர் வேலை தேடி வந்தனர். பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிர்புறம் பிரபாகரன், அவரது மனைவி இந்துமதி, காட்டுபரமக்குடி சொர்ணக்குமார், அவரது தந்தை ஓய்வு பெற்ற கனரா வங்கி மேலாளர் குருசாமி ஆகியோர் மின்வாரியத்தில் மின் கணக்கீட்டாளர் வேலை வாங்கி தருவதாகவும், இதற்காக சென்னையில் ஆல்பர்ட், நேரு என நண்பர்கள் உள்ளதாகவும் கூறி நான்கு பேரிடம் பணம் பெற்றனர்.


சுசீந்திரனிடம் ரூ 4.30 லட்சம், கோபிநாதன், முருகேசனிடம் ரூ.15.70 லட்சம், பாரதியிடம் ரூ.7.50 லட்சம் என ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் பெற்ற அவர்கள் சென்னை ஆல்பர்ட்டிடம் வழங்கினர். இதற்காக போலி பணி நியமன உத்தரவு வழங்கியதுடன் ஒரிஜினல் கல்வி சான்றுகளை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை. என புகாரில் தெரிவித்தனர்.
இந்திய நிகழ்வுகள்:ரூ.775 கோடி 'ஹெராயின்' பறிமுதல்


ஆமதாபாத்: குஜராத், உத்தர பிரதேசம், டில்லி போலீசார் இணைந்து நடத்திய வேட்டையில், 775 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹெராயின்' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


உ.பி.,யைச் சேர்ந்த ஹைதர் ஜைதி என்பவரது வீட்டில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உ.பி., டில்லி போலீசாருடன் இணைந்து, குஜராத் போலீசார் பல இடங்களில் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். உ.பி.,யின் முஸாபர்நகரில், ஹைதர் ஜைதியின் உறவினர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. 155 கிலோ எடையுள்ள இந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு, 775 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


கடந்த மாதம் குஜராத் கடற்கரையில் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஹைதர் ஜைதியும் ஒருவர். இவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையிலேயே, தற்போது உ.பி.,யில் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் தான், போதை பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து அழைத்து வர, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். இதற்கிடையே தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிலும், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'கோகெய்ன்' போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கர்ப்பிணி பலாத்காரம்: சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது


ஹைதராபாத்: ஆந்திராவில் கணவரை அடித்து உதைத்து, அவரது கர்ப்பிணி மனைவியை துாக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த சிறுவன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், பிழைப்பு தேடி குண்டூர் செல்ல, ரெபாலி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள நடைமேடையில் கணவர், அவரது கர்ப்பிணி மனைவி மூன்று குழந்தைகள் படுத்து உறங்கியுள்ளனர்.


நள்ளிரவில் குடிபோதையில் வந்த சிலர், கணவரை அடித்து துரத்தி விட்டு மனைவியை துாக்கிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தண்டவாளத்தை ஒட்டியுள்ள புதரில் மயங்கிய நிலையில் கிடந்த கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில், குடிபோதையில் இருந்த சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.


இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கூட்டு பலாத்காரம் செய்த ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். குடும்பத்தார் எதிரே கர்ப்பிணி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.டி.ஓ., மீது சரமாரி தாக்குதல்; பா.ஜ., - எம்.எல்.ஏ., கைது


தியோகர் : ஒடிசாவில், வட்டார வளர்ச்சி அதிகாரியை சரமாரியாக தாக்கிய புகாரின் அடிப்படையில், பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுபாஷ் சந்திர பானிக்ராஹியை போலீசார் கைது செய்தனர்.


ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, தியோகர் மாவட்டத்தில், திலிபானி வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருக்கிறார், கிருஷ்ணசந்திர தளபதி. இவரைப் பார்க்க பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுபாஷ் சந்திர பானிக்ராஹி, நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்போது, அவர் அலுவலகத்தில் இல்லை.


சிறிது நேரம் கழித்து வந்த கிருஷ்ணசந்திர தளபதியிடம், எம்.எல்.ஏ., தகராறு செய்ததுடன், அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், எம்.எல்.ஏ., சுபாஷ் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரை நேற்று கைது செய்தனர்.


இதற்கிடையே, தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக, எம்.எல்.ஏ., சுபாஷ் அளித்த புகாரின்படி, வட்டார வளர்ச்சி அதிகாரி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 லாரி வெடிபொருட்கள் மிசோரமில் பறிமுதல்


அய்சால்: வடகிழக்கு மாநிலமான மிசோரமில், இரண்டு லாரிகளில் கடத்தி செல்லப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படை யினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.


மிசோரமில், அய்சால் மாவட்டத்தில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த தீவிர சோதனையில், கேல்சிஷ் பகுதியில் வந்த இரண்டு லாரிகளை போலீசார் மடக்கினர். அதில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், மூவாயிரம் கிலோ எடையிலான, 24 ஆயிரம், 'ஜெலட்டின்' குச்சிகள், 100 கிலோ வெடி மருந்து உட்பட பல்வேறு பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.


லாரியில் இருந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். இந்த ஆயுதங்கள், அண்டை நாடான மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என, உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
03-மே-202214:05:51 IST Report Abuse
Ram Mayilai மாணவர்கள் என்கிற பெயரிலும், சிறுவர்கள் என்கிற பெயரிலும் வன்முறை, பாலியியல் வன்முறை, ஆசிரியர்களிடம் அத்துமீறல்கள் போன்ற அராஜகங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டது. இது சமீப காலத்தில் மிக அதிகம். காரணம்? காவல்துறையோ அரசோ கடும் நடவடிக்கை எடுக்காது என்கிற நம்பிக்கையே. இரும்புக்கரம் ஒடுக்க வேண்டியது அரசின் கடமை.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-மே-202210:57:16 IST Report Abuse
raja ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்து அந்த மாணவர்களை சிறையில் தள்ள வேண்டும் அப்படி செய்தால் தான் இனி எந்த மாணவனும் ஆசிரியரிடம் சண்டைக்கு போக மாட்டான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X