வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, இலங்கை தமிழர்கள் அளித்த வரவேற்பு, தி.மு.க.,வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால், இலங்கை செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும், உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க, ஏப்ரல் 30-ம் தேதி, இலங்கை சென்ற அண்ணாமலை, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.கொழும்பு விமான நிலையத்தில் இருந்து நுவரெலியா சென்ற அவர், தன் பயணத்தின் முதல் நிகழ்வாக, அங்குள்ள ஹனுமன், சீதா மாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார். இங்கு ராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டதாக, ஹிந்துக்கள் வழிபடும் அசோக வனத்தில் இருந்து, தன் பயணத்தை துவக்கி இருக்கிறார்.

மலையக தமிழர்களால் நிர்வகிக்கப்படும், இந்த சீதா மாதா கோவிலில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரின் பெயரில் அர்ச்சனை செய்தார்.துயரங்கள் விடுபடும்மே 1-ம் தேதி நுவரெலியாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் தின கொண்டாட்டத்தில், அண்ணாமலை பங்கேற்றார்.
இந்திய வம்சாவளியினரான, மலையக தமிழர்கள் திரண்டிருந்த கூட்டத்தில், அண்ணாமலையை அறிமுகப்படுத்திய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான், 'இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அனுப்பப்பட்டு, அவரின் பிரதிநிதியாக அண்ணாமலை இங்கு வந்திருக்கிறார்' என்று அறிவித்தார். அப்போது, கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.

இந்த கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது: ஹனுமன் சஞ்சீவி மலையை துாக்கி வந்து, லட்சுமணனை காத்தது போல, நரேந்திர மோடி இலங்கை மக்களை காக்க முயற்சிக்கிறார். ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது போல, நானும், என் ரத்தத்தின் ரத்தமான இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். இன்றைய இந்தியா, மோடியின் வல்லரசு இந்தியா. இலங்கை மக்களை, இந்தியா ஒருபோதும் கைவிடாது. உங்களின் துயரங்கள் அனைத்தும் விரைவில் விடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துரையாடல்:
மலையக தமிழர்களுக்கு பிரதமர் மோடி செய்த உதவிகளையும், அவர் பட்டியலிட்டார். அண்ணாமலையின் பேச்சுக்கு, தமிழர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. நுவரெலியா பயணத்தை முடித்து, யாழ்ப்பாணம் சென்ற அண்ணாமலை, அங்கு மிகப் பழமை வாய்ந்த நல்லுார் கந்தசாமி கோவிலில் வழிபட்டார். அங்குள்ள நல்லை ஆதினம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தரை சந்தித்து ஆசி பெற்றார். இலங்கையில் இருக்கும் ஒரே சைவ மடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், மாவை சேனாதிராஜா, சுமந்தன், சிவஞானம், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடன், மதிய உணவு சாப்பிட்டபடி, பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

ஆலோசனை
யாழ்ப்பாணம் சிறைக்கு சென்ற அண்ணாமலை, அங்குள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், 12 பேரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு உடைகள், உணவு பொருள்களை வழங்கினார். தொடர்ந்து, இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனை, நேற்று அண்ணாமலை சந்தித்தார். ஐந்து நாள் இலங்கை பயணத்தில் மலையக தமிழர்கள், ஈழத் தமிழ் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை, இலங்கையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் நிர்வாகிகளும், முழு நேர ஊழியர்களும் செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு திரும்பும் அண்ணாமலை, இன்று ஹிந்து சேவா இன்டர்நேஷனல், அகண்ட தமிழ் உலகம் அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இலங்கை தமிழ் மாணவர்களுக்காக, திருச்சி மாவட்டம் துறையூரில், ஹிந்து சேவா இன்டர்நேஷனல் அமைப்பு, விடுதி ஒன்றை நடத்தி வருகிறது.

திட்டத்தை முறியடிக்க...
அதுபோல, சென்னை, கோவை, திருச்சியில் விடுதிகளை தொடங்குவது தொடர்பாகவும், இலங்கை தமிழர் மாணவர்களை தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற பகுதிகளிலும் உயர் கல்வி படிக்க ஏற்பாடு செய்வது தொடர்பாகவும், இக்கூட்டத்தில் அண்ணாமலையுடன் ஆலோசிக்க இருப்பதாக, அந்த அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கையில் பல்வேறு தரப்பிரை அண்ணாமலை சந்தித்திருப்பதும், தமிழ் அமைப்புகளும், மலையக, ஈழத் தமிழர்களும் அவருக்கு அளித்த வரவேற்பும், தி.மு.க.,வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
'பா.ஜ.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக, தமிழகத்தில் தாங்கள் கட்டமைத்துள்ள எதிர்ப்புணர்வை, அண்ணாமலையின் இலங்கை பயணம் உடைத்து விடும்' என, துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்ற தி.மு.க., முக்கிய தலைவர்களும், கி.வீரமணி போன்றவர்களும், முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். பா.ஜ., திட்டத்தை முறியடிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இலங்கை செல்ல வேண்டும் என்று, அவருக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது.