புதுடில்லி: சமஸ்கிருதத்தை விட, தமிழ் பழமையானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என பின்னணி பாடகர் சோனு நிகம் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
'ஹிந்தி தேசிய மொழி அல்ல' என, கன்னட திரைப்பட நடிகர் சுதீப் தன் சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த 'பாலிவுட்' நடிகர் அஜய் தேவ்கன், 'அப்படியானால் உங்கள் படங்களை ஏன் ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிடுகிறீர்கள்' என, கூறினார். இது சமூக வலைதளத்தில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து, பாலிவுட் பின்னணி பாடகர் சோனு நிகமிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:நாட்டில் அதிகம் பேசப்படும் மொழியாக ஹிந்தி இருக்கலாம். ஆனால், அது நம் தேசிய மொழி என, அரசியலமைப்பில் எங்குமே குறிப்பு இல்லை. இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது. ஹிந்தி, ஆங்கிலம் இரண்டும் அலுவல் மொழிகள். தமிழ் தான் உலகின் மிக பழமையான மொழி என்பது எத்தனை பேருக்கு தெரியும். உலகின் பழமையான மொழி சமஸ்கிருதம் என, ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். ஆனால், தமிழ் அதைவிட பழமையானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹிந்தி பேசாதவர்களிடம் ஹிந்தி தான் தேசிய மொழி என கூறுவது நமக்குள் பிளவை ஏற்படுத்துகிறது. யாருக்கு என்ன மொழி பேச விருப்பமோ அதை பேசட்டும். எதையும் திணிக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சோனு நிகமின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE