உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்
கலாபூரணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவண்ணாமலை அருகே மருத்துவாம்பாடி கிராம மக்கள், மதம் மாற மறுத்ததால், 100 ஆண்டுகளாக பொது வழியாக பயன்படுத்திய இடத்தில், கிறிஸ்துவ சர்ச் நிர்வாகம் சுவர் எழுப்பியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கட்டாய மத மாற்றம் நடப்பதாக, சில ஹிந்து அமைப்புகள் அடிக்கடி குரல் எழுப்பி வருவது, இந்த சம்பவம் வாயிலாகவும், இதற்கு முன், தஞ்சை அருகே கிறிஸ்துவ பள்ளியில் படித்த, அரியலுார் மாணவி தற்கொலை வாயிலாகவும், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'சிறுபான்மையினரான நாங்கள் போட்ட பிச்சையில் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது' என, சில நாட்களுக்கு முன் பாதிரியார் ஜான் பொன்னையா என்பவர் பொது மேடையில் பேசினார்.
அவரின் பேச்சை உண்மையாக்கும் வகையில், அரியலுார் மாணவி தற்கொலை விவகாரத்தில், மவுனம் காத்த திராவிட ஆட்சியாளர்கள், இப்போதும் பாராமுகமாகவே இருக்கின்றனர். திருவண்ணாமலை சம்பவத்தில், 'மதம் மாற வேண்டும்' என பாதிரியாரால் நிர்ப்பந்தம் செய்யப்பட்டவர்கள், ஹிந்து ஆதிதிராவிட இனத்தவர்கள்.இந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் காவலர்கள் என்று கூறி, தி.மு.க.,வின் தயவில் பதவி சுகத்தை அனுபவிக்கும் திருமாவளவன் மற்றும் சமூக நீதியை காப்பவர்கள் என தங்களை பறைசாற்றிக் கொள்ளும் வீரமணி போன்றவர்களும், நடந்த சம்பவம் பற்றி அறியாதவர்கள் போல மவுனமாக இருப்பதுவேடிக்கையாக உள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம், அயோத்யா மண்டப நிர்வாகத்தில், நிதி முறைகேடு என யாரோ ஒருவர் புகார் கொடுத்தவுடன், அந்த மண்டபத்தை கையகப்படுத்த முனைப்பு காட்டிய தமிழக அரசு, இந்த விஷயத்தில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த கோடிக்கணக்கான ஹிந்துக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அவமதிக்கும் செயலாகும். திராவிட மாடல் ஆட்சியில், சிறுபான்மை சமூகத்தினரின் இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்தால், பெரும்பான்மையாக வசிக்கும் ஹிந்துக்கள் கொதித்து எழ நேரிடும்.
அப்போது, மாநிலத்தின் அமைதி என்னவாகும் என்பதை, ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.'சமூக நீதியை காப்போம்' என, பொதுக் கூட்டங்கள் தோறும் முழங்கி வரும் முதல்வர் ஸ்டாலின், அனைத்து சமூகத்தினரும் நிம்மதியாக, சச்சரவின்றி வாழும் வகையில், ஒவ்வொரு விஷயத்திலும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும். இல்லையெனில், ௨௦௦௬ல் தி.மு.க., தலைமையில் அமைந்த ஆட்சியை, 'மைனாரிட்டி' அரசு என்று ஜெயலலிதா கிண்டலடித்தார்.
அதேபோன்று, தற்போதைய அரசை மைனாரிட்டிகளுக்கான அரசு என்று, பொதுமக்கள் கேலி பேசும் நிலைமை உருவாகும். அதே நேரத்தில், பாதிரியாரின் நெருக்கடிக்கு பணியாமல், மதம் மாறாமல் ஒற்றுமை காத்த மருத்துவாம்பாடி கிராம மக்களுக்கு, 'ராயல் சல்யூட்!'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE