சென்னை: நாளை [மே 08 ஞாயிற்றுகிழமை ] மாலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை சென்னை மியூசிக் அகாடெமியில் நடக்கவிருக்கும் 52 வது துக்ளக் ஆண்டுவிழாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஆண்டுதோறும் விமரிசையாக நடந்துவரும் துக்ளக் ஆண்டுவிழாவில் வாசகர்கள் நேரடியாக ஆசிரியரை கேள்விகள் கேட்க, அதற்கு ஆசிரியர் பதில் கூறும் தனி பாரம்பரியத்தை துக்ளக் நிறுவன ஆசிரியர் சோ ராமஸ்வாமி தொடங்கி, அது தொடர்ந்து இன்றும் நடந்துவருகிறது. சோ மறைந்த பிறகும் ஆண்டு விழா மட்டுமல்ல, அந்த பாரம்பரிய ஆசிரியர் -வாசகர் நேரிடை கேள்வி பதில்களும் தொடர்ந்து சிறப்பாக நடக்கிறது.

துக்ளக் ஆண்டு விழாவின் இன்னொரு சிறப்பு அம்சம், அதில் பல பெரிய தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். பாஜ தலைவர்கள் எல். கே அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது, ஒரு முறைக்கு மேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் பல கட்சித் தலைவர்கள் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கின்றனர்.

துக்ளக் ஆண்டு விழா என்பதை விட நிதி அமைச்சரின் பங்கேற்பு இப்போது நிலவும் அரசியல் நிலைமையில் முக்கியமானதாக கருதப்படுகிறது. நீட் போன்ற விஷயங்களில் மத்திய மாநில மாநில உறவில் இருக்கும் பிரச்னை, கவர்னர் - முதல்வர் உறவில் சிக்கல், ஜிஎஸ்டி சம்பந்தமான சச்சரவுகள், இலங்கையில் பொருளாதார நெருக்கடி போன்ற பின்னணியில் நிதி அமைச்சர் என்ன பேசுவார் என்பது பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE